’பெண்களை மானபங்கம் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து என்கவுண்டர் செய்யவேண்டும்’...விஜயசாந்தியின் வீராவேசம்...

By Muthurama LingamFirst Published Jun 24, 2019, 2:40 PM IST
Highlights

’பெண்களை மானபங்கம் செய்தவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்காமல் நடுரோட்டில் வைத்து உடனுக்குடன் என்கவுண்டர் செய்யவேண்டும்’ என்று மிகவும் ஆவேசமாகப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் பிரபல நடிகையுமான விஜயசாந்தி.


’பெண்களை மானபங்கம் செய்தவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்காமல் நடுரோட்டில் வைத்து உடனுக்குடன் என்கவுண்டர் செய்யவேண்டும்’ என்று மிகவும் ஆவேசமாகப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் பிரபல நடிகையுமான விஜயசாந்தி.

இன்று தனது 52 வது பிறந்தநாளை ஒட்டி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த விஜயசாந்தி,’என்னை யாராவது அவதூறாக பேசினால் முதலில் போடா என்பேன். அதற்கும் அதிகமாக ஏதாவது செய்தால் போராடுவேன். பெண்கள் என்றால் விளையாட்டு பொம்மையாக ஆக்கிவிட்டனர்.நிஜ வாழ்க்கையிலும், சமூக வலை தளத்திலும் எங்கு பார்த்தாலும் வெட்கமில்லாமல் பயமில்லாமல் பெண்களிடம் பெண்மையை துகிலுரித்து வருகின்றனர். பெண்களை மானபங்கப்படுத்துவோரை நடுரோட்டில் பொதுமக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் தூக்கிலிடுவதுதான் ஒரே தீர்வு.

இந்த சமூகம் எந்த வழியை நோக்கி போகிறதோ தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை கற்பழித்து கொலை செய்த காம கொடூரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இதுபோன்றவர்களை நடு ரோட்டில் சுட்டுத்தள்ள வேண்டும். என்கவுண்டர் செய்ய வேண்டும். தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையும். ஆண்டுக் கணக்கில் விசாரணை என்ற பெயரில் தள்ளிப்போடாமல் உடனடியாக தண்டனை கொடுத்தால் தான் இதுபோன்ற தவறுகள் செய்ய இன்னொருவருக்கு துணிவு வராது. 

சிறு வயதிலேயே ஓராண்டு இடைவெளியில் என் தாய் தந்தை இறந்துவிட்டனர். எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. இருந்தாலும் நான் எதற்கும் அஞ்சியதில்லை. ஒரு ஆண்டிற்கு 17-18 படங்களில் நடித்து ஓய்வில்லாமல் இருந்தேன். எனக்கு நானே ராணுவ கட்டுப்பாடு வகுத்துக்கொண்டேன். சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்ட நான் தொழிலை தெய்வமாக நினைத்தேன்.
எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் இல்லை. நானே என் கணவர் சீனிவாச பிரசாத்தை தேர்ந்தெடுத்து மணந்துகொண்டேன். 30 ஆண்டுகளாக சந்தோ‌ஷமாக இருக்கிறேன். என் பின்னிருந்து அவர்தான் வழி நடத்துகிறார்.

அரசியலில் நடிகைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். உழைப்பிற்கேற்ற மரியாதை கொடுப்பதில்லை. நடிகை ரோஜா 9 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடு போன்ற அரசியல்வாதியை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக போராடினார். அவரை சட்டமன்றத்திலேயே அடியெடுத்து வைக்க விடாமல் எவ்வளவு அராஜகம் செய்தார்கள். துணிந்து போராடிய அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி பதவி கொடுக்காதது மிகுந்த வருத்தத்தை அளித்தது.என் போன்ற நடிகைகளுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் அரசியலுக்கு வர ரோல்மாடலாக இருக்கிறார். தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கி கொடுத்ததால் சோனியா காந்தி மீது மரியாதை ஏற்பட்டு நன்றிக்கடன் செலுத்த காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். கட்சி எதுவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக பாடுபடுவதே எனது குறிக்கோள்’ என்றார்.

click me!