
'என் மகளின் காதல்,திருமணம், விவாகரத்துக்கு இஷ்டத்துக்கு எதையாவது எழுதிக்கொண்டேயிருக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் நாங்கள் முறைப்படி அறிவிப்போம்’என்று மீடியாக்கள் மீது அநியாயத்துக்கு ஆத்திரம் கொள்கிறார் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்கிற ‘குத்து’ரம்யாவின் அம்மா ரஞ்சிதா.
தமிழில் ’குத்து’, ’பொல்லாதவன்’, ’வாரணம் ஆயிரம்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் ஏராளமாக நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரம்யா, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக செயல்பட்டார். இதையடுத்து அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவை அடிக்கடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சைகளில் மாட்டினார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ரம்யா எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில்அதிபர் ரபேலுடன் நடிகை ரம்யாவுக்கு துபாயில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவின. பின்னர் திருமணம் ரத்தானதாக முரண்பட்ட செய்திகள் வந்தன. இதற்கு ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கம் அளித்துள்ளார்.அது குறித்துப் பேட்டி அளித்த அவர்,’தற்போது ரம்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
ரம்யாவின் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவும் மனமில்லை. இதுபோன்ற காரணங்களினால் இரண்டுபேரும் பரஸ்பரம் பேசி பிரிந்துவிட்டனர் என்பது மட்டுமே உண்மை. இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம்’என்கிறார் மம்மி ரஞ்சிதா. ஆனால் ரம்யாவோ சில வாரங்களாகவே முற்றிலும் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.