சொன்னதைச் செய்த விஷால் … இருப்புத்திரை படத்தின் ஒரு டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கினார்…

By Selvanayagam PFirst Published Sep 26, 2018, 8:19 AM IST
Highlights

நடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தமிழ் திரைப்படங்கள் வெளியாகும்போது ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து தனது சொந்த தயாரிப்பான இருப்புத்திரை படத்தின் மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கினார்.

தமிழில் திரைப்படங்கள்  வெளியாகும் போது ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என நடிகர் விஷால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அறிவித்தார்.

ஆனால் அதற்கு பல தயாரிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உங்களது சொந்தப் படம் வெளியாகும்போது கொடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இந்தப் பிரச்சனை குறித்து அதன் பிறகு யாரும் பேசவில்லை.

இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த `சண்டக்கோழி' திரைப்படம் விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய முக்கியமான படமாக இது அமைந்தது. இந்த நிலையில், சண்டைக் கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மீண்டும் அதே (லிங்குசாமி - விஷால் -யுவன்) கூட்டணியில் உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. 

அந்த விழாவின்போது, தான் சொன்னபடி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி  மூலம் தயாரித்த இருப்புத்திரை படத்தின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாயை  நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

20 விவசாயிகள் மேடையேற்றப்பட்டுக் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை இயக்குநரும் விவசாயியுமான பாண்டிராஜ் வழங்கினார்.விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும்போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. விஷாலின் இந்த செயல் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படத் துறையினரும் விஷாலைப் பாராட்டி வருகின்றனர்.

click me!