மதுரை விமான நிலையத்தில் தனக்கும் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கும் இடையே நடந்த பிரச்சனை என்ன என்பதை நடிகர் சித்தார்த் விவரமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் தங்களை துன்புறுத்தியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்குமாறு அவரிடம் கேட்டிருந்தனர். அதற்காக நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : “எங்களுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. நேற்று நான் விமான நிலையத்தில் நடந்ததை பதிவிட்ட பிறகு ஏராளமானோர் தங்களுக்கு அங்கு நடந்த அனுபவங்களை மெசேஜ் வாயிலாக எனக்கு பகிர்ந்து இருந்தனர். இதுகுறித்து நான் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதைவிட இந்த பதிவின் மூலம் விவரிக்க விரும்பினேன்.
நான் மதுரைக்கு பலமுறை விமானத்தில் சென்றிருக்கிறேன். ஆனால் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் இதற்கு முன் நடந்ததில்லை. இந்த முறை நான் என் குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஏர்போர்ட்டே காலியாக இருந்தது. அப்போது சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் எங்களது அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். அப்போது எனது ஆதார் கார்டை எடுத்து கொடுத்தபோது, இது உன்னுடைய அடையாள அட்டை தானா என்பதில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.
பின்னர் அவர்கள் பேசும் விதம் கடுமையாக இருந்தன. என்னுடையை பையை சோதனை செய்யும்போது அதிலிருந்து எனது எலக்ட்ரானிக் உபகரணங்களை எல்லாம் தனியாக ஒரு டிரேயில் தூக்கி போட்டனர். அப்போது நான் இப்படி போடாதீர்கள், ஏற்கனவே விமான நிலையத்தில் பல பொருட்கள் தொலைந்து இருக்கின்றன என கூறினேன்.
இதையும் படியுங்கள்... போன வாரம் ரஜினியுடன் திருப்பதி விசிட்.. இந்த வாரம் திருவண்ணாமலை - கோவில் கோவிலாக சுற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
வயதானவர்களிடம் பண்பாக நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் எனது தாயாரின் பையை சோதனை செய்யவேண்டும் என கேட்டனர். பின்னர் அதிலிருந்து சில்லறைகளையெல்லாம் வெளியே எடுக்க சொன்னார்கள். ஏன் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு இது இந்தியா, இங்கு நாங்கள் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும் என்றனர்.
பின்னர் என்னுடைய சகோதரியின் பையில் ஊசிகளெல்லாம் இருந்தன. அதை எதற்காக எடுத்து வந்தீர்கள் என கேட்டார். பொது இடத்தில் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை கேட்பது எனக்கு தவறாக பட்டது. நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். பின்னர் நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது உயர் அதிகாரி ஒருவர் என்னை அழைத்தார். அப்போது நான் போட்டிருந்த மாஸ்க்கை கழட்டிய பின், அவர், நான் உங்களோட ரசிகன் என கூறி நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்க போகலாம் என்றார்.
நான் ஒரு பிரபலம் என தெரிந்த பிறகு எனக்கு மரியாதை கொடுத்ததை என்னால் எற்றுக்கொள்ள முடியாது. அதுவே பொதுமக்கள் யாருக்காவது நடந்தால் என்ன செய்திருப்பீர்கள் என கேட்டேன். விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது கடினமான வேலை தான். ஆனால் இது போன்று தனி நபர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துவது என்பது நியாயமில்லாத செயல். என்னை சிறப்பாக கவனிக்க வேண்டும் என நான் சொல்லவில்லை. வயதானவர்களுக்கு மதிப்பளியுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரோடு வரும்போது இது போன்று நடந்தால் என்ன செய்வீர்கள் என்பதை யோசித்து பாருங்கள்?” என்று சித்தார்த் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ரெட் ஜெயிண்ட் பொறுப்பில் இருந்து அதிரடியாக விலகும் உதயநிதி! தலைமையை ஏற்க உள்ளது யார் தெரியுமா?