2023ம் ஆண்டு நடத்தப்படவுள்ள அரசு தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விவரத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 போன்ற தேர்வுகளின் அட்டவணையை ஆண்டு அட்டவணையாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை, தேர்வு முடிவுகள் வெளியாகும் விவரத்தை வெளியிட்டுள்ளது.
வெளியானது தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?
அதன்படி குரூப் 2, 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களுக்கு அண்மையில் முதல்நிலை தேர்வு நடைபெற்ற நிலையில் முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை உதவி சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் மாதம் 15ம் தேதியும், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் 9ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் பாடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு மே மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளன.
பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு 2024ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு அதே ஆண்டில் மே மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.