
மத்திய அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற டாடா நினைவு மையத்தில் (Tata Memorial Centre - TMC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நல்ல சம்பளம் மற்றும் மத்திய அரசு அந்தஸ்து கொண்ட இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை இங்கே காண்போம்.
டாடா நினைவு மையத்தில் மொத்தம் 34 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவியாளர் (Assistant), நிர்வாக அதிகாரி (Administrative Officer III), உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer), துணைத் தலைமை பாதுகாப்பு அதிகாரி (Deputy Chief Security Officer), மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) மற்றும் உதவி கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பதவியைப் பொறுத்து மாதம் ரூ.35,400 முதல் ரூ.67,700 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 50 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். பெண்கள், SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tmc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள் டிசம்பர் 3, 2025 ஆகும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 24, 2025. கடைசி நேரத் நெரிசலைத் தவிர்க்க ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.