
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள முக்கிய ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கான ஆர்ஆர்பி தேர்வு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வரவிருக்கும் தேர்வுக்கான கால அட்டவணையை முன்கூட்டியே அறிய வாய்ப்பளிப்பதால், லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களின் தேர்வுக்கான தயாரிப்புகளைத் திட்டமிட்டு செயல்படுத்த உதவியாக இருக்கும்.
இந்த தேர்வு காலண்டர் அறிவிப்புடன், அனைத்து மண்டல ரயில்வேகளும் மற்றும் உற்பத்தி யூனிட்களும் தங்களின் காலிப் பணியிடங்களை மதிப்பீடு செய்து, OIRMS (Online Integrated Railway Management System) என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2026 தேர்வுகள் தாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இன்று முடிவடையாத தேர்வுகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை, 2026 கணக்கீட்டில் இருந்து கழிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பணியிடங்கள் இரட்டிப்பாக சேர்க்கப்படுவதைத் தவிர்க்கவும், காலிப் பணியிட விவரங்களில் துல்லியத்தைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ரயில்வே ஆட்சேர்ப்பு பணிகளுக்கான ஒருங்கிணைப்பு பொறுப்பை மேற்கொள்ளும் வகையில், தகுந்த அதிகாரம் பெற்ற அமைப்புகள் மூலம் நோடல் ஆர்ஆர்பி-கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆர்ஆர்பி பெங்களூரு தலைவர், அனைத்து மண்டல ரயில்வேகள், உற்பத்தி யூனிட்கள் மற்றும் ஆர்ஆர்பி-களுக்கு காலிப் பணியிட மதிப்பீட்டிற்கான விரிவான அட்டவணையை அனுப்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்தி, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த முன்னேற்ற அறிக்கைகளை தொடர்ந்து சமர்ப்பிக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
2026 ஆர்ஆர்பி தேர்வு காலண்டர் வெளியீடு, தொழில்நுட்ப பணியிடங்கள் முதல் பிரபலமான ரயில்வே பதவிகள் வரை பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுக்கு பெரும் தெளிவை வழங்கியுள்ளது என்றே கூறலாம். ஒவ்வொரு தேர்வுக்கான தனித்தனி அறிவிப்புகள் மற்றும் விரிவான விவரங்கள், சம்பந்தப்பட்ட ஆர்ஆர்பி-கள் மூலம் காலத்திற்கேற்ப வெளியிடப்படும் எனவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.