
கூகுள் (Google) போன்ற உலகின் முன்னணி டெக் நிறுவனத்தில் வேலை செய்வது பலருக்கும் கனவாக இருக்கிறது. அதிக சம்பளம், சிறந்த வசதிகள், நிலையான வாழ்க்கை என்று நினைத்து ஆண்டு முழுவதும் தயாராக இருந்தாலும், மிகக் குறைவானவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதிர்ஷ்டசாலியாக கூகுளில் வேலை பெற்ற ஒருவர், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வேலைவாய்ப்பை விட்டு விலகியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
2021 ஆம் ஆண்டு கூகுளில் வேலை வாய்ப்பு பெற்றவர் ஜிம் டாங். அப்போது வயது 27. தனது உழைப்பின் பலனாக, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் சந்தோஷத்தைப் பெற்றார். 40 வயதில் ஓய்வு பெற்று, மகிழ்ச்சியான கூகுள் வாழ்க்கையை முழுமையாக்க வேண்டும் என்பதே அவரது கனவு. வருடத்திற்கு ₹2.5 கோடி சம்பளம் கிடைத்ததால், எதிர்காலம் உறுதியாக இருக்கிறது என்று நினைத்தார்.
ஆனால், காலப்போக்கில் டாங் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. கார்ப்பரேட் வாழ்க்கை அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேர வேலை, அடிக்கடி அழுத்தம், தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரமின்மை போன்றவை சிரமத்தை கூட்டின. இதற்கிடையில் ஏற்பட்ட காதல் தோல்வி, அவரது மனநிலையை முற்றிலும் பாதித்தது. யார் அந்தப் பெண் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் காதல் தோல்வியே தனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியதாக ஒப்புக்கொண்டார்.
அதனால், சிறிது ஓய்வு எடுக்க முடிவு செய்த டாங், 15 நாட்கள் விடுமுறை கேட்டார். ஆனால், அந்த விடுமுறைக்குப் பிறகு கூகுள் அலுவலகத்திற்கு அவர் திரும்பவில்லை. இறுதியாக, 2025 மே மாதத்தில் தனது உயர்ந்த சம்பள வேலையை ராஜினாமா செய்தார். தனது வாழ்க்கையில் “சம்பளம்” மட்டுமே வெற்றியின் அளவுகோல் அல்ல என்பதை உணர்ந்தார்.
இப்போது டாங் முற்றிலும் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். டிஜிட்டல் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்வதுடன், பிறருக்கு பயிற்சியும் அளிக்கிறார். மேலும், ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்குச் சென்று அனுபவங்களை வலைப்பதிவாக பகிர்ந்து வருகிறார். "வெற்றியை வெளிப்புறப் பொருட்களால் அளக்க முடியாது. உண்மையான வெற்றி என்பது உள்ளார்ந்த திருப்தி தான்" என்று டாங் கூறுகிறார்.