
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிய, 560 கெளரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்த நிலையில், மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையில், விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் நேர்காணல் முடிந்த நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த நியமனம்?
இந்த கல்வி ஆண்டில் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, ஏற்கனவே உள்ள கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இடங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டன. இதனால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, தற்காலிகமாக கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது. இதற்கு முதுகலை பட்டப்படிப்புடன் NET/SLET/SET போன்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்தனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 34 பாடப்பிரிவுகளில் 574 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18 முதல் 28 வரை மண்டல வாரியாக நேர்காணல் நடத்தப்பட்டது. கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, தற்போது 560 பேர் கொண்ட பட்டியல் https://tngasa.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.