
இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை (ஐஐடி) எம்.பி.ஏ. துறை 2021-22 கல்வி ஆண்டில் 100 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி அசத்தி இருக்கிறது. ஐஐடி மெட்ராஸ் 2021-22 கல்வி ஆண்டு பயின்ற 61 எம்.பி.ஏ. மாணவர்களும் 2022 ஐஐடி மெட்ராஸ் வேலை வாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து உள்ளனர். மேலும் 2020-21 கல்வி ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த கல்வி ஆண்டு மாணவர்களின் சராசரி வருமானம் 30.35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
2021-22 கல்வி ஆண்டு ஐஐடி மெட்ராஸ்-இல் எம்.பி.ஏ. பயின்ற மாணவர்களின் சராசரி வருமானம் ஆண்டுக்கு 16 லட்சத்து 66 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுமார் 16 சதவீத மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்பே பணியில் சேர்வதற்கான ஆணையை பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கான பணி படிப்பின் போது அவர்கள் சென்ற பயிற்சி இடத்திலேயே பணியில் சேர அழைக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்: இன்று முதல் 'அக்னிபத்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்கள் இதோ !!
இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸ் பணி நியமனம் முழுக்க ஆன்லைன் வழியிலே நடைபெற்றது. எனினும், இந்த நடைமுறை வேகமாக நடந்து முடிந்ததோடு, பணி ஆணை எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே வழங்கப்பட்டு விட்டது என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்து இருக்கிறது. ஐஐடி மெட்ராஸ் வேலை வாய்ப்பு முகாமில் அமேசான், சிஸ்கோ, டிலொய்ட், ஐசிஐசிஐ மற்றும் மெக்கின்சி போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளன.
“எங்கள் மாணவர்களின் திறமை மற்றும் எங்களின் கல்வி முறைகளே நிறுவனங்கள் வழங்கி இருக்கும் நல் வாய்ப்புகளுக்கு சான்றாக அமைகின்றன. அதிக தரமுள்ள ஆசிரியர்கள், அசாத்திய பயிற்சி முறை மற்றும் கல்வி முறைகளுக்கு தொழில் மற்றும் நிர்வாகத் துறை பெயர் பெற்று இருக்கிறது. எதிர்காலத்தில் மேலும் பெரிய நிறுவனங்களில் எங்களின் எதிர்கால மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என ஐஐடி மெட்ராஸ் தொழில் மற்றும் நிர்வாக துறை தலைவர், பேராசிரியர் தேன்மொழி தெரிவித்து இருக்கிறார்.