முதல்முறையாக தமிழில் CRPF தேர்வு! முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டிய உள்துறை அமைச்சகம்.!

Published : Apr 15, 2023, 01:36 PM ISTUpdated : Apr 15, 2023, 01:39 PM IST
முதல்முறையாக தமிழில் CRPF தேர்வு! முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டிய உள்துறை அமைச்சகம்.!

சுருக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில் அதனை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. 

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மத்திய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நடைமுறை 2024ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் மாதம் நடைபெற உள்ள சிஆர்பிஎஃப் தேர்வில் மொத்தமுள்ள 9.212 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதினார். அதில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) 9,212 காவலர்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாகத் தங்களது கனிவான கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும்போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிபெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கெனெக் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும்.

விருப்புவெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள் நாட்டின் துணைராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர்பிஎப்-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்தியப் பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில் அதனை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu Guest Lecturers Salary Hike: 9,646 ஆசிரியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! மாதம் ரூ.5,000 ஊதிய உயர்வு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
8th Pay Commission: 4 மடங்கு Fitment Factor கிடைத்தால் ரூ.15.20 லட்சம் அரியர்ஸ் கிடைக்குமா? ரூ.53,100 அடிப்படை சம்பளம் வாங்குவோருக்கு மெகா ஜாக்பாட்!