தமிழக பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களுக்கான தகுதி என்ன? விண்ணம் செய்யும் முறை குறித்து பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் மொத்தமாக காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகின்ற ஜனவரி 13ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், பெருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்டப் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.T. அல்லது B.Ed முடித்திருக்க வேண்டும்.
ஜூலை 1, 2022 தேதியின் படி 32 வயது முதல் 42 வயது வரையிலான நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். SC, ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு B.T. அல்லது B.Ed பட்டம் பெற்று 12 ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றய அனுபவம் தேவை. இந்த காலிப் பணியிடங்களுக்கான தேர்வு 2023, ஏப்ரல் 9ம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.