12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published : May 09, 2023, 08:49 AM IST
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சுருக்கம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியான நிலையில் இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (மே 9) தொடங்குவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. சுமார்  8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவ மாணவிகள் இந்தப் பொதுத்தேர்வை எழுதினர். நேற்று வெளியான முடிவுகளின்படி 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

47,934 மாணவ மாணவிகள் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணைத் தேர்வுகள் தொடங்கும். இதனிடையே, இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றைக் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் மே 9ஆம் தேதி காலை 11 மணி முதல் மே 13ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டில் எது வேண்டும் என்பதை ஆலோசித்து முடிவு செய்வது நல்லது. விடைத்தாள் நகல் பெற்றால்தான் பின்னர் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பிக்க முடியும்.

ஒரு பாடத்திற்கு விடைத்தாள் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான ரூ.275 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணமும் மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும். கட்டணத்தை விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்ததும் கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாளின் நகலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now