
நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வீறுநடை போடுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி பாதையில் முக்கிய பங்கு வகிக்கும் நடுத்தர வர்க்க மக்கள் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஹோம் கிரெடிட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள “தி கிரேட் இந்தியன் வாலெட் 2025” அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, இந்தியாவின் தாழ்மையான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களில் சுமார் 60% பேர் தங்களது நிதி எதிர்காலத்தை பற்றிய கவலையில் உள்ளனர். இவர்களது முக்கிய பிரச்சனைகளில் கல்வி செலவுகள், அவசர கால சேமிப்பு, கடன் திருப்பிச் செலுத்தல், வேலை நிலைத்தன்மை ஆகியவை அடங்குகின்றன.
பாதிக்கப்படும் நிதிச்சூழல்
அடித்தட்டு மக்களின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்புடைய கவலைகளே அதிகம் உள்ளதாகவும், அவசர காலங்களில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பணத்திற்காக சிரமப்படும் சூழல் இந்தியா முழுவதும் நிலவி வருவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் அடித்தட்டு மக்களின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 90 சதவீதம் என கூறப்படுகிறது. விரல் விட்டு எண்ணும் வகையில் இருக்கும் பணக்காரர்கள் நிதி நெருக்கடியில் சிக்குவதே இல்லை எனவும் தி கிரேட் இந்தியன் வாலெட் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம்
வணிக அல்லது தொழில் வாய்ப்புகள் இல்லாததால் அவர்கள் தினசரி ஊதியத்தில் நம்பி வாழ்கிறார்கள். இது அவர்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
வேலைவாய்ப்பு பற்றாக்குறை
தகுதியான வேலைகள் கிடைக்காததால், குறைந்த ஊதியத்தில் எளிய வேலைகளில் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. தொழில்துறையில் கூட அதிக பயிற்சி இல்லாததால் வேலைநீக்கம் ஏற்படுகிறது.
கல்வி மற்றும் கல்வித் தரம்
இவர்களின் பிள்ளைகள் மேன்மையான கல்வியைப் பெற முடியாமல் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் கற்றல் தரம் குறைவாக உள்ளது, மேலும் வறுமையால் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை விட்டு வேலைக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.
சுகாதாரம்
சுகாதார வசதிகள் குறைவு, மருத்துவக் காப்பீடு இல்லாமை, மற்றும் மருத்துவ செலவுகளைச் சந்திக்க முடியாமை ஆகியவை ஒரு பெரிய சவாலாக உள்ளது.
வீட்டு வசதிகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வசதி
தாழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் இவர்களுக்கு பாதுகாப்பான வீடுகள், தூய்மையான குடிநீர், மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகள் இல்லாதது வாழ்வை சிக்கலாக்குகிறது.
அடித்தட்டு மக்கள் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அவசர தேவைக்காக சேமிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அதில் தெரியவந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவங்களிடம் வாங்கியுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் நடுத்தர வர்க்கத்தினர் தவித்து வருவதாக ஆய்வு கூறியுள்ளது.
அடித்தட்டு மக்களின் முக்கிய கவலைகள்
18% – குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்க முடியாத நிலை
15% – அவசர தேவைக்காக சேமிக்க முடியாத நிலை
15% – எடுத்துள்ள கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமை
12% – வேலை அல்லது வருமானத்தை இழக்கும் நிலை
6% – ஓய்வு காலத்திற்கான போதிய நிதி இல்லை
6% – அடிப்படை மருத்துவச் சேவைகள் பெற முடியாத நிலை
3% – வீடு வாங்க முடியாத நிலை
2% – தொழில் தொடங்க இயலாமை
1% – குடும்பத்தில் திருமண செலவுக்காக சேமிக்க முடியாத நிலை
இந்த வரிசையில் மிகவும் கவலைக்கிடம் தருவது, 43% மக்கள் “மேலே பட்டியலிடப்பட்ட எந்த காரணங்களும் இல்லை” என பதிலளித்திருக்கின்றனர். இதன் மூலம், மற்ற நுண்ணிய நிதிச் சிக்கல்கள் கூட இவர்களின் வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
யாருக்கு அதிக பாதிப்பு?
பெண்கள் மற்றும் மேட்ரோ நகர வாசிகள் இந்த நிதிச் சிக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் ஓய்வுபெறும் வயதினருக்கான நிதி தயார் நிலை இல்லாததும், கூடுதல் பொருளாதார அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?
மிகவும் முக்கியமான விஷயம், அடித்தட்டு மக்களுக்கான நிதி, கல்வி மற்றும் திட்டமிடல் சூழல் இயல்பாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.இதனால் எளிதாக கடன் சிக்கலில் சிக்கி, தீவிர நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். தற்போது பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகமாக நிதி திணிப்பை எதிர்கொள்கிறார்கள் என்பது கவலைக்கிடமானது.
தீர்வு என்ன?
அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பாக, நிதி கல்வி கற்பித்தல், குறைந்த வட்டியளவில் கடன்கள், உடனடி அவசர சேமிப்பு திட்டங்கள், தொழில்கள் தொடங்க ஆதரவு திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்களு்ககு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த அறிக்கையின் மூலம், அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி நிலை குறித்த உண்மை வெளிப்பட்டுள்ளது. எதிர்கால நிதி சிக்கல்களைக் குறைக்க அரசு மற்றும் நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், வளர்ச்சி பாதையில் இந்த முக்கியமான வர்க்கம் மேலும் பின்னடைய நேரிடும்.
இந்தியாவின் அடித்தட்டு மக்களின் நிதி தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், அதைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. நிதி தட்டுப்பாடுகளை போக்க நுண்ணறிவு அடிப்படையிலான திட்டமிடல், அரசின் தீவிரத்தன்மை மற்றும் சமூக நிதி கல்வி தேவைப்படுகிறது. இவற்றின் மூலம் மட்டுமே சமூகத்தில் நிதி சமநிலை ஏற்பட்டு, அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையுடன் எதிர்காலம் இருக்க முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.