
பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி மூலமாகவும், தரகர்கள் (Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சேமிப்பும் முதலீடும் :
சேமிப்பும் (savings) முதலீடும்(investment) ஒன்றல்ல. சேமிப்பெல்லாம் முதலீடில்லை,சேமிப்பின்றியும் முதலீடில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது, ஒருவர் தனது வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்திற்காக ஒதுக்கி வைப்பது.
சேமிப்பை எப்போது முதலீடு என்று அழைக்கலாம்? சேமித்த பணத்தைப் பயன்படுத்தி, நீங்கள் அதன் மூலம் வருமானம்(income) பெற்றால்மட்டுமே அது முதலீடாகக் கருதப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் பணத்தை வங்கியில் சேமித்து, வட்டி பெறலாம்.வியாபாரத்தில் போட்டு, பல மடங்காக்க முயலலாம். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கலாம். நிலமோ, வீடோ வாங்கலாம். சிலவகை முதலீடுகள், சிறிய தொடர்ச்சியான வருமானத்தைத் தரக்கூடியவை (வங்கியில் மாதாந்திர வட்டி). சிலவோ, விற்கும்பொழுது, பலமடங்கு லாபம் தரக்கூடும் (நிலம், வீடு, பங்குகள்).
எதில் முதலீடு செய்யலாம்? எப்படி செய்யலாம் ?
முதலீடு செய்யும் வழிகள் :
மிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப் பார்க்கலாமா?
அசையாச் சொத்துகள் :
நிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே தவிர குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.
அசையும் சொத்துகள் :
நகை, வங்கிச்சேமிப்புகள், கடன் பத்திரங்கள், பங்குகள் முதலியவை இதில் அடங்கும். தங்கம் ஒரு எளிமையான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆயினும், இதனைப் பாதுகாத்துவைப்பது சற்றே கடினமென்பது பொதுவான அபிப்பிராயம். அது மட்டுமல்ல, விற்றால் மட்டுமே இதன் இலாபத்தின் பயனை அனுபவிக்க முடியும். ஆனால் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையும், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தொய்வு நிலையும், இன்றைய நிலையில், தங்கமே சிறந்த முதலீடு எனப் பலரையும் எண்ண வைக்கிறது.
வங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுகிறது. ஆபத்தில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.
பங்குகளைத் துணிகரமான முதலீடுகள் (Risky investments) என வகைப்படுத்தலாம். இவ்வகை முதலீடுகளில், லாபம் வர எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ, அதே அளவு போட்ட முதல் (capital) பறிபோகவும் வாய்ப்பு உள்ளது என்பதால், முன்பெல்லாம், நடுத்தர மக்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. ஆனால், நிலைமை மாறிவருகிறது. . மக்கள் இன்று விரைவாக பணத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். எனவே, பங்குச்சந்தை முதலியவற்றில் துணிந்து இறங்குகின்றனர்.எனவே, பங்குச் சந்தை பற்றிய அறிவு இன்று அவசியமாகிறது.
சரி. பங்கு என்றால் என்ன? அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா?
பங்குகள் :
நீங்கள் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறீர்கள். அதற்கு, மூலதனம்(capital) தேவையல்லவா? தொழில், சிறிய அளவில் இருக்குமானால், உங்கள் கைப்பணத்தைப் போட்டால் போதுமானது. அதுவே சற்றுப் பெரிய அளவில் இருக்குமானால், உங்கள் கைப்பணம் போதாமல், கொஞ்சம் வெளியில் கடன் வாங்குவீர்கள். மிகப் பெரிய அளவில் நடைபெறும் தொழில் அல்லது வியாபாரமானால், தேவைப்படும் மூலதனத்தைத் திரட்ட நீங்கள் பங்குகளை வெளியிடலாம். அதாவது, இதன் மூலம், பொதுமக்கள் பலரும் உங்கள் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாகின்றனர்.
உதாரணமாக, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டால், அதைப் பத்து ரூபாய் முக மதிப்புள்ள(Face value) 10 லட்சம் பங்குகளாக்கி, பொது மக்களிடம் விற்கலாம். பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப, அப்பங்குகளில் முதலீடு செய்வர்.
இதனால் என்ன பயன்?
நிறுவனதாரர், தமது கைப்பணத்தையோ, கடன் வாங்கிய பணத்தையோ முதலீடு செய்தால், நட்டமோ லாபமோ அவரை மட்டுமே சார்ந்தது. ஆனால், பங்குகளை வெளியிடுவதன் மூலம், நட்டம் லாபம் இரண்டுமே பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வாங்கிய தொகைக்கு வட்டி எதுவும் கிடையாது. லாபம் வந்தால், பங்காதாயம் ( dividend) கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். என்ன? பங்குகளை வெளியிட்டபின், அந்நிறுவனம், தனி நபருக்குச் சொந்தமானது என்ற நிலையில் இருந்து மாறி, பங்கு நிறுவனம் ஆகிவிடுகிறது.
முதலீடுகளின் சில வகைகளைப் பற்றியும், பங்கு என்றால் என்ன என்றும் பார்த்தோம். பங்குச்சந்தையைப் பற்றி மேற்கொண்டு தொடருமுன், பங்குச்சந்தை எப்போது தோன்றியது என்ற விவரத்தை அறிந்துகொள்ளலாம். 14ஆம் நூற்றாண்டில், வெனிஸ் நகர ஆட்சியர்கள், தாம் பிற நாடுகளில் வாங்கிய கடன்களைத்திருப்பித் தர வசதியில்லாததால், மக்களிடையே கடன் பத்திரங்களை வினியோகித்தனர். அப்பத்திரங்கள் வியாபாரிகளாலும், நில உரிமையாளர்களாலும் வாங்கி, விற்கப்பட்டன. பின் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், இத்தகைய பத்திரங்களை அரசின் பற்றாக்குறைகளின் போது வெளியிடத்தொடங்கின.
பின், 1693ம் ஆண்டு தொடங்கி, லண்டனில் இவ்வகைப் பத்திரங்களை அரசும், பிற பெரு நிறுவனங்களும் வெளியிட்டன. அதை வாங்கி, விற்க விரும்பியவர்கள், அதற்கான முகவர்கள் ஆகியோர், உணவகங்களில் கூடினர். நாள்பட, நாள்பட பரிவர்த்தனைகள் அதிகரித்தபின்னர், 1773ல் முதன்முதலில் முகவர்கள் அனைவரும் 'விற்பனைக்கான கழகம் ஒன்றைத் துவங்கினர். 1801ல் லண்டனில் வசித்த முகவர்கள் 20000 பவுண்டுகளைத் திரட்டி 'லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' ஐத் தொடங்கினர். இதே சமயத்தில் அமெரிக்காவிலும் இத்தனைய பங்குவர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1817ல் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் துவங்கப்பட்டது. இவையிரண்டுமே உலகின் மிகப் பழமையான பங்கு வர்த்தக சபைகளாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.