
சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது நிறுவனங்கள் குறைவான வருமானத்தை கணக்கில் காட்டி தப்பிக்க முடியாது, எந்த தகவலையும் மறைக்க முடியாது என்று பி.எஸ்.இ. நிர்வாக இயக்குநர் ஆஷிஸ் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவையை (ஜிஎஸ்டி) நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. 4 வகையான வரிகள் விதிக்கப்பட உள்ள நிலையில், வரிவீதங்கள், பொருட்களின் மீதான வரிகள் ஜி.எஸ்.டி.குழுவால் இறுதி செய்யப்படும் நிலையில் இருக்கின்றன.
இந்நிலையில், பிஎஸ்இ எனப்படும் ‘பாம்பே ஸ்டாக் எக்சேஞ்’ மையத்தின் நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் சவுகான் நிருபர்களுக்கு மும்பையில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளது. அதன் பின்பு நிறுவனங்கள் எந்த தகவலையும் மறைக்க முடியாது. வருமானத்தை குறைத்து காட்டி இனிமேல் தப்பிக்கவும் முடியாது. ஆதலால் அடுத்த 4 ஆண்டுகளில் சுமார் 1,000 நிறுவனங்கள் வரை பங்குச்சந்தையில் பட்டியலிட வாய்ப்பு இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் 74 நிறுவனங்கள் சுமார் ரூ.27 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு நிதி திரட்டினார்கள். 2010-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது மட்டுமே அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
தற்போது 5.1 கோடி நிறுவனங்கள் தங்களின் பெரும்பாலான வியாபாரத்தை ரொக்கமாகவே கையாளுகின்றன. ஆனால் ஜிஎஸ்டிக்கு பிறகு ஆவணங்களைடிஜிட்டல் முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதால், குறைவான வரு மானத்தை காண்பிக்க முடியாது. அதனால் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டால் மட்டும் கிடைக்கும் சலுகைகள் இனிமேல் எதுவும் கிடைக்காது. ஆதலால், இனிமேல் அதிக நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.