
டொயோட்டா நிறுவனம் உலகின் மிகப்பெரும் கார் உற்பத்தியாளர் என்ற பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2021 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் விவரங்களை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அதன்படி 2021 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் உலகம் முழுக்க 1.05 கோடி யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. மேலும் டொயோட்டா நிறுவனம் 10.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக டொயோட்டா இருந்து வருகிறது. டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மற்றும் கொரோலா போன்ற மாடல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அமோக விற்பனையை பதிவு செய்து வருகின்றன.
உலகம் முழுக்க சுமார் 180-க்கும் அதிக நாடுகளில் டொயோட்டா கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் சில மாடல்கள் பெரும்பாலான நாடுகளில் அதிக பிரபலமாகி வருகின்றன. லேண்ட் குரூயிசர், பிராடோ, ஹிலக்ஸ், டண்ட்ரா, டகோமா, வென்சா, கொரோலா போன்ற மாடல்கள் டொயோட்டா நிறுவனத்தின் பிரபல மாடல்கள் எனலாம். இவை எதிர்பார்ப்பையும் மீறி விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர், இன்னோவா, குவாலிஸ், கொரோலா மற்றும் கேம்ரி உள்ளிட்டவை பிரபல மாடல்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலான மாடல்கள் சில லட்சம் கிலோமீட்டர்கள் வரையிலான பயன்பாடுகள் வரையிலும் அவ்வளவு எளிதில் பாழாகாது என சந்தையில் பெயர் பெற்றுள்ளன. இதன் காரணமாக டொயோட்டா நிறுவன மாடல்கள் எளிதில் விற்பனையாகி விடுகின்றன.
டொயோட்டா பிராண்டின் கீழ் லெக்சஸ், ரேன்ஸ், ஸ்கியன், டைஹட்சு மற்றும் ஹினோ உள்ளிட்டவை துணை பிரிவுகளாக இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் கார்களையும் சேர்த்தே டொயோட்டா உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர் என்ற பெருமையை பெற்று தந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.