
நிலம் அல்லது வீடு போன்ற சொத்துகளை வாங்கிய பிறகு, அவற்றைப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் வைத்திருக்க சில ஆவணங்கள் மிகவும் முக்கியம். இந்த ஆவணங்கள் உங்கள் உரிமையை உறுதிப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும். வழக்கறிஞர் ஜீவாவின் ஆலோசனையின் அடிப்படையில், பின்வரும் ஆவணங்களை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்:
கிரயப் பத்திரம் அல்லது தானப் பத்திரம்
நிலம் அல்லது வீடு உங்கள் பெயருக்கு மாற்றப்படும்போது பெறப்படும் கிரயப் பத்திரம், தானப் பத்திரம் அல்லது இதர பத்திரங்கள் மிக முக்கியமான ஆவணங்களாகும். இவை உங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் முதன்மை ஆவணங்கள்.சொத்து தானம், உயில், பாகப்பிரிவினை, வாரிசுரிமை, அரசு ஒதுக்கீடு போன்றவற்றின் மூலம் பெறப்பட்டிருந்தால், அந்தந்த ஆவணங்கள் அவசியம். மேலும், சொத்து முந்தைய உரிமையாளர்களின் பெயரில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட மூலப்பத்திரங்களும் தேவை. மூலப்பத்திரம் இல்லையெனில், அதற்கான சான்றிதழ் நகல் அல்லது பத்திரம் தொலைந்ததற்கான காவல்துறை புகார் சான்று இருக்க வேண்டும்.
பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்
உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்கள் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்த உதவும். இவை உங்கள் சொத்தின் அடையாளத்தை அரசு பதிவேடுகளில் உறுதி செய்யும்.வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate) சொத்தின் மீது எந்தவித கடனோ, சட்ட சிக்கல்களோ இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது சொத்து வாங்கிய பிறகு கட்டாயம் பெற வேண்டிய ஆவணம்.அதேபோல் நீங்கள் வாங்கிய சொத்து ஒரு கட்டடமாக இருந்தால், அதற்கான கட்டட அனுமதி மற்றும் லே-அவுட் ஆவணங்கள் அவசியம். இவை சொத்து சட்டப்பூர்வமாக கட்டப்பட்டதா என்பதை உறுதி செய்யும்.
சொத்துவரி, மின்சார பில் அவசியம்
உங்கள் பெயருக்கு மாற்றப்பட்ட சொத்து வரி மற்றும் மின்சார பில் சான்றிதழ்கள், சொத்து உங்கள் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும்.சொத்தின் மீது எந்தவித வங்கிக் கடனும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் முக்கியம். இது எதிர்காலத்தில் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
நகல் எடுத்து வைத்திருந்தால் நல்லது
ஒவ்வொரு ஆவணத்தின் நகலை எடுத்து வைத்திருங்கள். அசல் ஆவணங்களை வங்கி லாக்கர் போன்ற பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.உங்கள் ஆவணங்கள் எங்கு உள்ளன, எவை உள்ளன என்பதை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இது எதிர்காலத்தில் எந்தவித குழப்பமும் இல்லாமல் இருக்க உதவும்.இந்த ஆவணங்களை முறையாகப் பாதுகாப்பது, உங்கள் சொத்தின் உரிமையைப் பாதுகாக்க இருக்கும் மிக முக்கியமான படியாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.