கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் முக்கியமான சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்
கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வரம்பிற்குள் கடன் வாங்க அனுமதிக்கிறது. அந்த கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் வாடிக்கையாளர்கள் மீண்டும் செலுத்தி விட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டுகள் அனைவரது வாழ்விலும் முக்கிய அங்கமாக மாறிப் போயுள்ளது. ஆனாலும், கிரெடிட் கார்டுகளை பற்றி எதிர்மறையான எண்ணமே பெரும்பாலானவர்களிடம் உள்ளது. அதற்கு காரணம், அதனை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல், கடன் பிரச்சினைகளில் சிக்கி கொள்வதே. கிரெடிட் கார்டுகளில் நன்மை, தீமை என இரண்டுமே உள்ளன. அது அதனை உபயோகிப்பவர்கள் கைகளில் உள்ளது.
அந்த வகையில், நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவராக இருந்தாலோ அல்லது அது போன்ற ஒன்றை வாங்கும் எண்ணத்தில் இருந்தாலோ சில கட்டணங்கள் தொடர்பான முக்கிய விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வருடாந்திர பராமரிப்பு கட்டணம்
இது 'ஆண்டு கட்டணம்' என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது மறைமுக கட்டணம் அல்ல. ஆண்டுக் கட்டணம் என்பது ஒரு வருடத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படும். அந்த தொகை கார்டுக்கு கார்டுக்கு மாறுபடும். சில நேரங்களில், வங்கிகள் இலவச கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது வாழ்நாள் முழுவதும் கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணம் இருக்காது.
ரொக்க அட்வான்ஸ் கட்டணம்
உங்கள் மொத்த கடன் வரம்பின் ஒரு பகுதி உங்களுக்கு பண வரம்பாக வழங்கப்படும். உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஏடிஎம்மில் இருந்து எடுக்கக்கூடிய தொகைதான் இது. இப்படி ரொக்கமாக முன்பணம் எடுப்பது விலையுயர்ந்த பரிவர்த்தனையாகும். ஏனெனில் பெறப்பட்ட தொகையில் 2.5% வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிவர்த்தனை செய்த நாளிலிருந்தே ரொக்க முன்பணத்துக்கான வட்டி வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு வட்டியில்லா காலம் பொருந்தாது.
அதிக வரம்பு கட்டணம்
உங்கள் கிரெடிட் கார்டு வகையைப் பொறுத்து, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரம்பிற்கு மேல் செலவு செய்ய நீங்கள் அனுமதிக்கப்படலாம் அல்லது அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். வங்கிகள் இதை இலவசமாக அனுமதிப்பதில்லை- இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு அதிக வரம்புக் கட்டணமாக அதிக தொகையை வசூலிக்கின்றன. பெரும்பாலான வங்கிகள் குறைந்தபட்சம் ரூ. 500 வசூலிக்கிறது. ஆனால் இது உங்கள் கடன் வரம்பை நீங்கள் தாண்டிய தொகையைப் பொறுத்தது.
தாமத கட்டணங்கள்
உங்கள் கிரெடிட் கார்டில் உள்ள நிலுவைத் தொகை முழுவதையும் உங்களால் செலுத்த முடியவில்லை என்றால், வங்கிகள் உங்களுக்கு குறைந்தபட்ச தொகையை செலுத்துவதற்கான விருப்பத்தை வழங்குகின்றன. குறைந்தபட்ச தொகையை கூட உங்களால் செலுத்த முடியாத பட்சத்தில், தாமதக் கட்டணத்தை வங்கி விதிக்கும். உங்கள் ஸ்டேட்மென்ட் பேலன்ஸ் அடிப்படையில் ஒரு நிலையான தொகை வசூலிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்
உங்கள் கிரெடிட் கார்டில் வசூலிக்கப்படும் வருடாந்திர சதவீத விகிதம் (APR) உங்கள் பில்களையும் பாதிக்கிறது. குறிப்பாக நீங்கள் காலாவதியான தொகையை முன்னெடுத்துச் செல்லும் போது. மேலும், மற்ற வகை கடன்களுடன் ஒப்பிடும்போது கிரெடிட் கார்டு வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதால், கிரெடிட் கார்டுகளைப் பராமரிப்பது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மொத்த நிலுவைத் தொகையை நீங்கள் செலுத்தாத போது மட்டுமே இது பொருந்தும். உதாரணமாக, மாதம் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ. 15,000. ஆனால், ரூ. 5,000 மட்டுமே நீங்கள் செலுத்தினால், மீதித் தொகையான ரூ. 10,000க்கு பொதுவாக ஆண்டுதோறும் 33-42% வரையிலான வட்டி விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி
அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள விகிதங்களின்படி வரி விதிக்கப்படும், எனவே நீங்கள் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வருடாந்திர கட்டணம், வட்டி செலுத்துதல் மற்றும் இஎம்ஐகளில் செயலாக்கக் கட்டணம் ஆகியவற்றில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது (தற்போது 18 சதவீதம்).