தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் டாடா மோட்டார்ஸ் முதற்கட்டமாக ரூ.914 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இது தொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியா மற்றும் உலகளாவிய தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு இருகரம் கூப்பி வரவேற்பதால் பல்வேறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் புதிய ஆலைகளை திறந்து வருகின்றன. அந்த வகையில் பயணிகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் பிரீமியம் கார்களை உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்க தயராகி வருகிறது.
ரூ.9,000 கோடியில் புதிய ஆலை
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் புதிய ஆலையை அமைப்பதாக தெரிவித்தது. இந்த ஆலைக்காக ஒட்டுமொத்தமாக ரூ.9,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக டாடா நிறுவனம் கூறியிருந்தது.
பிரிமீயம் கார்கள் உற்பத்தி
இந்த புதிய ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற பிரிமீயம் சொகுசு கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை செயல்பட்டுக்கு வந்தால் சுமார் 5,000 பேருக்கு வேலைவாப்பு கிடைக்கும். இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக இந்த ஆலைக்கு ரூ.914 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?
அதாவது மொத்த நிலப்பரப்பில் 19,02,022.5 சதுர மீட்டர் பரப்பளவில், முதற்கட்டமாக 52,000 சதுர மீட்டர் பரப்பளவில் உற்பத்தி ஆலையை அமைக்க ரூ.914 கோடி முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி 15 மாதங்கள் முடிவடையும் என்றும் இதில் சுமார் 1,500 ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என்றும் புதிய ஆலைக்காக தடையில்லா சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கோரி டாடா மோட்டார்ஸ் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தி இலக்கு என்ன?
புதிய ஆலையில் ஆண்டு உற்பத்தி திறன் 2.5 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் இருக்கும் என்றும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் உற்பத்தி இலக்கும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலை அடுத்த தலைமுறை சொகுசு பிரீமிம் கார்கள் மற்றும் புதிய மின்சார வாகனங்களின் உற்பத்திக்கான மையமாக செயல்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.