Tata Motors : 2022 முதல் மாதத்திலேயே இப்படியா ? விற்பனையில் அசத்திய டாடா மோட்டார்ஸ்

By Kevin KaarkiFirst Published Feb 2, 2022, 11:50 AM IST
Highlights

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் அதிகளவு விற்பனையை கடந்த மாதம் பதிவு செய்து இருக்கிறது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அசத்தலான புது மாடல்களை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் விற்பனையும் கணிசமாக அதிகரிக்க துவங்கியது. கடந்த டிசம்பர் மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது. அந்த வரிசையில், தற்போது டாடா மோட்டார்ஸ் மாதாந்திர விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது.

ஜனவரி 2022 மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40,777 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்களை விற்பனை செய்து இருப்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இதுவே முதல் முறை ஆகும். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரம் யூனிட்களை கடக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. விற்பனை மட்டுமின்றி உற்பத்தியிலும் டாடா மோட்டார்ஸ் வளர்ச்சி பெற்று இருக்கிறது. 

விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்.யு.வி. மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 28,108 யூனிட்கள் எஸ்.யு.வி. மாடல்கள் ஆகும். நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை தொடர்ந்து புதிய டாடா பன்ச் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் அமோக விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இரு மாடல்களும் ஜனவரி மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளன.

இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களான ஹேரியர் மற்றும் சஃபாரி இணைந்து சுமார் 8 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. நெக்சான் EV எனும் ஒற்றை மாடலை கொண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் 70 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட டிகோர் EV மாடல் 2022 ஜனவரி மாதத்தில் மட்டும் 2,892 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. 

click me!