economic crisis in sri lanka :சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டதையடுத்து, அந்த நாட்டை திவால் பட்டியலில் சேர்த்து சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டதையடுத்து, அந்த நாட்டை திவால் பட்டியலில் சேர்த்து சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்கக்கூட அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை என்று அந்நாட்டு அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
கடன் தர நிறுவனங்கள்
ஒருநாட்டுக்கு சர்வதேச வங்கிகள், நிறுவனங்கள் கடன் தரலாமா, முதலீடு செய்யலாமா,கடன்,பங்கு பத்திரங்களை வாங்கலாமா என்பது குறித்து சர்வதேச கடன்தர நிறுவனங்கள் வழங்கும் மதிப்பீட்டின் அடிப்படையில் நடக்கிறது. ஒவ்வொரு நாட்டின் நிதிநிலை, பொருளாதார நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கடன்தர நிறுவனங்கள் பல்வேறு மதிப்புக் குறியீடுகளை வழங்கி வருகின்றன.
கெடு முடிந்தது
இலங்கை அரசு ஏற்கெனவே பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்தது. கைவசம்இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும், பெட்ரோல், டீசல் வாங்கவும் மட்டுமே இருப்பதாக கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. இப்போது இலங்கை அரசு வெளிநாடுகளில் வாங்கியிருந்த 2 கடன் பத்திரங்களுக்கான காலக்கெடுவும் கடந்த ஏப்ரல் 18ம் தேதியோடு முடிந்துவிட்டது.
மோசமான பிரிவு
இதையடுத்து கடன் திருப்பிச் செலுத்த கூடுதலாக 30 நாட்கள் இலங்கைக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் இன்றுடன்(மே18ம்தேதி) முடிகிறது. இன்றுக்குள் இலங்கை அரசு கடன் பத்திரங்களுக்கான தொகையை திருப்பித் தராவிட்டால், சர்வதேச கடன்தர மதிப்பீடு நிறுவனங்கள் இலங்கை அரசை “டி” பிரிவில் அதாவது கடன் வழங்கத் தகுதியற்ற, திவாலான, கடனைத் திருப்பித் தராத நாடுகள்பட்டியலி்ல் சேர்த்துவிடும்.
ஒருவேளை அவ்வாறு சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் திவால் என்று அறிவித்துவிட்டால், எதிர்காலத்தில் இலங்கைக்கு சர்வதேச முதலீடுகள் வருவதும், இலங்கை அரசு வெளிநாடுகளில் கடன் பெறுவதும், சர்வதேசநிதியம், உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றில் கடன் பெறுவதும் கடினமாகிவிடும்.
கையிருப்பு செலாவணி இல்லை
அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பெட்ரோல், டீசல் இருப்பு முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு இலங்கையிடம் கையிருப்பாக அந்நியச் செலாவணி ஏதும் இல்லை என்பது கூடுதலாக அந்நாட்டை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் காஞ்சனா வஜிசேகரா நாடாளுமன்றத்தில் கூறுகையில் “ அடுத்த 2 நாட்களுக்கு மக்கள் எரிபொருள் வாங்க வர வேண்டாம். பெட்ரோல், டீசல் ஏற்றிவந்த கப்பல் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் கொழும்பு துறைமுகத்தில் காத்திருக்கிறது.
ஆனால், அந்த கப்பலுக்கு தேவையான பணத்தை வழங்க இலங்கை அரசிடம் பணம் இல்லை. வெளிச்சந்தையில் கடன் பெறவும் கையிருப்பு டாலர் இல்லை. நிதியை எவ்வாறு திரட்டுவது எனத்தேடி வருகிறோம். அடுத்தவாரம் வரை இலங்கையில் பெட்ரோல் கிடைக்காது. அத்தியாவசியச் சேவையான ஆம்புலன்ஸ், மருத்துவ வாகனங்களுக்காக மட்டுமே பெட்ரோல் கையிருப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்
நிலைமை மோசம்
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் “ உலக வங்கியிடம் 16 கோடி டாலர் கடன் கேட்டிருக்கிறோம். ஆனால், அதை எரிபொருள் செலவுக்கு பயன்படுத்தலாமா என்பது தெரியாது. புள்ளிவிவரங்கள் பொய்த்துவிட்டன, உண்மையில் இலங்கை அரசிடம் 10 லட்சம் டாலர் கூட இல்லை” எனத் தெரிவித்தார்
இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இலங்கை அரசிடம் அந்நியச்செலவாணி கையிருப்பு இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாதநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. உலகவங்கி, சர்வதேச நிதியத்திடமும் கடன் கேட்டு இலங்கை அலுத்துவிட்டது, இந்தியா சார்பில் கடன்நிதி, நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்குத் தள்ளி, வாழ்வாதாரத்தை சீரழித்த அரசுக்கு எதிராகவும், அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மக்களின் போராட்டம் வலுப்பதையடுத்து, கடந்த வாரம் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் இலங்கையை சர்வதேச நாடுகளிடம் கையேந்தவைத்து, பொருளாதாரத்தை சீரழித்த அரசுக்கு எதிராக நாள்தோறும் வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகிறார்கள்.