
அமெரிக்கபெடரல் வங்கியின் முடிவால், மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக சரிவை நோக்கிப் பயணித்தன. காலையில் சரிவுடன் தொடங்கி மாலையில் பெரிய வீழ்ச்சியுடன் முடிந்தது
பெடரல் வங்கி
அமெரி்க்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தப் போவதாகத் தெரிவித்திருந்தது. அந்த வட்டிவீதம் 50 புள்ளிகள் வரை இருக்கலாம் என்று நேற்று தகவல் வெளியானது.
இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. இதனால், ரிசர்வ் வங்கி வரும் நிதிக்கொள்கையில் வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் இருந்தது
விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாகச் சரிந்துவந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் 1.5 சதவீதம் உயர்ந்து பேரல் 102.39 டாலர்களாகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் 1.2 சதவீதம் அதிகரித்து, 97.41 டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் குழப்பத்திலும் அச்சத்திலும் இருப்பதால் முதலீட்டில் ஆர்வம் காட்டவில்லை. பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்து 59,301 புள்ளிகளில் வர்த்தகத்தை நடந்தது
பெரும் சரிவு
இந்த சரிவு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிற்பகலுக்குப்பின் வீழ்ச்சி கூடுதலாக இருந்தது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 575 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 59,034 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 168 புள்ளிகள் குறைந்து 17,639 புள்ளிகளில் நிலைபெற்றது.
லாபம் இழப்பு
பங்குச்சந்தையில் 1678 பங்குகள் லாபத்துடன் கைமாறின. 1644 நிறுவனப் பங்குகள் சரிவைச்சந்தித்தன, 102 பங்குகள் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. நிப்டியில் அதானி போர்ட், டைட்டன் , ஹெச்டிஎப்சி , பவர் கிரிட், ஓன்ஜிசி ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. மாறாக, ஆக்சிஸ் வங்கி, டிவிஸ் லேப், ஹெச்யுஎல், டாக்டர் ரெட்டீஸ்,ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் லாபத்தில் முடிந்தன
ஆக்சிஸ், என்டிபிசி லாபம்
தேசியப்பங்குச்சையில் ஆட்டோமொபைல், வங்கி, எப்எம்சிஜி, கட்டுமானம், தகவல்தொழில்நுட்பம், உலோகம், பொதுத்துறை வங்கிகளின் பங்குகள்சரிவில் முடிந்தன. மும்பைப் பங்குச்சந்தையில் ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், டைட்டன், விப்ரோ, லார்சன்அன்ட் டூப்ரோ, பவர் கிரிட் டிசிஎஸ், இன்போசிஸ்,ஹெச்சிஎல்டெக் ,ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்தன
மாறாக, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, இன்ட்ஸ்இன்ட் வங்கி, ஹெச்யுஎல், எஸ்பிஐ, ஏசியன் பெயிட்ஸ் ஆகிய பங்குகள்அதிகமான லாபத்துக்கு கைமாறின.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.