
உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றமான சூழல் மேலும் மோசமடையும்போது, அது கச்சா எண்ணெய் விலையிலும், இந்தியாவிலும் எதிரொலிக்கும். குறிப்பாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கக்ககூடும்.
இதனால், உள்நாட்டில் சில்லரைப் பணவீக்கத்தின் அளவு மேலும் அதிகரிக்கும், பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. சில்லரை பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசலுக்கான வரியைக் குறைத்தால் மட்டுமே முடியும்.
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் இருக்கும் டான்பாஸ் மண்டலத்தில் உள்ள டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் அதிபர் புதினை சமீபத்தில் சந்தித்து தங்கள் மாநிலங்களை சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கக் கோரினர். இதன்படி, டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களையும் தன்னாட்சி பெற்ற சுதந்திரநாடாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்த இரு பகுதிகளுக்குள் தனது படைப்பிரிவையும் ரஷ்யா அனுப்பியுள்ளது.
இதையடுத்து, உக்ரைன் மீது மறைமுகமாக படையெடுத்து, சர்வதேச ஒப்பந்தங்களை மீறியதற்காக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் நிதித்தடையை பிறப்பித்துள்ளன. உக்ரைன் பதற்றத்தை,சிக்கலை மேலும் தீவிரமாக்கினால் ரஷ்யா மீது கடுமையான தடைகள் பிறப்பிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது
ரஷ்யாவுக்கு எதிராக நிதித்தடைகள் பிறப்பிக்கப்பட்டாலே அங்கிருந்து மேற்கத்திய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுஏற்றுமதியில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தேவையை நிறைவுசெய்ய முடியாத நிலை ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும்.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யாவிலிருந்து மிகக்குறைவாகவே கச்சா எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயுவை இறக்குமதி செய்கிறது. ரஷ்யா மீதான இந்தத் தடைகள் இந்தியாவை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும் மறைமுகமாக பாதிக்கும்.
இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் “ கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரும்போது, உள்நாட்டில் சில்லரை பணவீக்கம் உயரும். ஆதலால் அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்தக்கூடும். அல்லது மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து நடுத்தர குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
உக்ரைனுக்குள் ரஷ்யா மேலும் அத்துமீரும்போது, அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்கலாம். அப்போது ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி திறனில் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய் விலையும், எரிவாயு விலையும் உயரலாம். இவ்வாறு நடந்தால், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் செல்லக்கூடும். ஆனால், ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டால், ஆண்டின் 2-வது பகுதியில் கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலராகக் குறையவும் வாய்ப்புள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மிகக்குறைவாகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதிசெய்கிறது. ரஷ்யா கடினமான கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதால் அந்த எண்ணெயை சுத்திகரிக்க இந்திய நிறுவனங்கள் விரும்பவதில்லை,போக்குவரத்துச்செலவும்அதிகம். ஆதலால், இந்தியப் பொருளாதாரத்துக்கு பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும், ஆனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியா பதிக்கப்படும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்ஏற்றுமதியில் 11% ரஷ்யா வைத்திருக்கிறது.
ரஷ்யா மீது தடைகள் அதிகமாகும்போது, உலகளவிலான கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளையில் 60 சதவீதம்வரை பாதிப்பு ஏற்படும்.அப்போது பிரண்ட்கச்சா எண்ணெய் விலை பேரல் 110 டாலராக உயரலாம்.
ஈரான்-அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டால், ஈரானிலிருந்து பெரும்பகுதி கச்சா எண்ணெய் உலகச்சந்தைக்கு வரும். இதனால் கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலருக்குள் கட்டுப்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டியில் “ உக்ரைன்-ரஷ்யா பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலரைஎட்டிவிட்டது. இது இந்தியாவின் நிதி நிலைத்தன்மைக்குஅச்சுறுத்தல். கச்சா எண்ணெய் விலையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.