Russia Ukraine:கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பிரிவில்அதிகமாக முதலீடு செய்யுங்கள்,அதிகமாக ஏற்றுமதி செய்ய காத்திருக்கிறோம் என்று இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பிரிவில்அதிகமாக முதலீடு செய்யுங்கள்,அதிகமாக ஏற்றுமதி செய்ய காத்திருக்கிறோம் என்று இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதாரத் தடை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அந்நாட்டு மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சாஎண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாமல் ரஷ்யா தவித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதாரச் சிக்கல்கள்
அமெரி்க்காவும், ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து விதித்த பொருளாதாரத் தடையால் ரஷ்யாவின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டபோது, ரஷ்யா சந்தித்த பொருளாதார சிக்கல்களுக்கு இணையாக தற்போது சந்தித்து வருகிறது.
ஆனாலும், ரஷ்யா தனக்கு நட்பாக இருக்கும் நாடுகளுடன் தொடர்ந்து வர்த்தக உறவு வைக்க ஆர்வமாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த ரஷ்யா ஆர்வமாக இருக்கிறது.
இந்தியாவுடன நெருக்கம்
உக்ரைனுக்கு எதிரான போர் குறித்து ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல், இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டது.
ஆனால், உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவை கண்டிக்க வேண்டும் என இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதி பெரும்பாலனவை ரஷ்யாவிலிருந்துதான் இந்தியா இறக்குமதி செய்கிறது. குறிப்பாக எஸ்-400 ரக நவீன ஏவுகணையை ரஷ்யாவிலிருந்து இந்தியாஇறக்குமதி செய்ய இருக்கிறது.இந்த சூழலில் ரஷ்யாவுக்கு எதிராக எந்தவிதமான நிலைப்பாடும் இந்தியா எடுக்கவில்லை.
முதலீடு
ரஷ்யாவின துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் அறிவிப்பு குறித்து ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் “ ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி 100 கோடி டாலர்களை எட்டியுள்ளது. எதிர்காலத்திலும் இந்த ஏற்றுமதி அதிகரிப்புக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அதிகமான முதலீட்டை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அதிகரித்தால், இந்தியாவுக்கு அதிகஅளவில் ஏற்றுமதியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய நிறுவனங்கள்
ரஷ்யாவில் உள்ள பல்வேறு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பங்குகளை வைத்துள்ளன. குறிப்பாக ரஷ்ய அரசின் ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் நயாரா எனர்ஜி நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகளை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.