Remittances to India: 2010-11ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பணம் 55.6 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டில் இரட்டிப்பாகி 118.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளை விட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து அதிக பணம் வருகிறது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த பொருளாதார நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தின் பங்கு 2023-24ஆம் ஆண்டில் வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தை விட அதிகமாக உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளாது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் மார்ச் மாத அறிக்கையின்படி, இந்தியாவிற்கு பணம் அனுப்புதல் 2010-11ஆம் ஆண்டில் 55.6 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டில் 118.7 பில்லியன் டாலராக இரட்டிப்பாகியுள்ளாது. இது நாட்டின் வணிகப் பற்றாக்குறையில் கிட்டத்தட்ட பாதியைக் குறிக்கிறது என ரிசர்வ் வங்கியின் கூறுகிறது. இந்தக் காலகட்டத்தில் வெளிப்புற அதிர்ச்சிகளை உள்வாங்குவதில் பணம் அனுப்பும் ரசீதுகள் முக்கிய அங்கமாக இருந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு பணம் அனுப்புவதில் ஏற்படும் மாற்றம் பற்றியும் ஆர்பிஐ அறிக்கை விவரித்துள்ளது. பணம் அனுப்புவதில் ஏற்படும் பல்வேறு பரிமாணங்களையும் எடுத்துக்காட்டுகிறது. அறிக்கையின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 1990 இல் 6.6 மில்லியனாக இருந்தது. இது 2024 இல் மூன்று மடங்காக அதிகரித்து 18.5 மில்லியனாகக் கூடியிருக்கிறது.
உலகளாவிய புலம்பெயர்ந்தோரில் இந்தியர்கள்:
இந்தக் காலகட்டத்தில், உலகளாவிய புலம்பெயர்ந்தோரில் இந்தியர்களின் பங்கு 4.3 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்த இந்தியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் வளைகுடா நாடுகளைத் தவிர, வளர்ந்த பொருளாதாரங்களும் இந்தியாவிற்கு பணம் அனுப்பும் முக்கிய ஆதாரங்களாக உருவெடுத்துள்ளன.
2048ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா உலகின் மிகப்பெரிய தொழிலாளர் வழங்குநராக மாறும். இந்தியாவிற்கு அனுப்பப்படும் மொத்த பணத்தில் அமெரிக்கா மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கும். இது 2020–21 இல் 23.4% இலிருந்து 2023–24 இல் 27.7% ஆக அதிகரித்தது. அதே நேரத்தில், பிரிட்டனில் இருந்து வரும் பணமும் 2020-21 இல் 6.8% இலிருந்து 2023-24 இல் 10.8% ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாவது பெரிய வள ஆதாரமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டது. இதன் பங்கு 2023-24ஆம் ஆண்டில் 18% இலிருந்து 19.2% ஆக அதிகரித்திருக்கிறது.