
தபால் நிலையங்களில் அடித்தட்டு மக்களுக்காகவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் ஒரு சிறு தொகையை முதலீடு செய்தால் பிற்காலத்தில் நல்ல வருமானம் பெற முடியும். அப்படி தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு அற்புதமான திட்டம் தான் ரெக்கரிங் டெபாசிட் என்று சொல்லப்படுகிற RD.சிறு துளி பெருவெள்ளம் என்பது போல, சிறுக சேமித்தால் லட்சாதிபதி ஆகலாம் என்பதற்கு இத்திட்டம் உதாரணம்.
இந்த திட்டத்தில் தினமும் 50 ரூபாய் சேமிப்பதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம் என்றால் அது மிகையல்ல. தபால் நிலையங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்களுக்கு நீங்கள் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். சில திட்டங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற முதலீடுகள் அனைவராலும் செய்யக்கூடியவையாக இருக்காது. ஏனெனில் தினசரி சம்பளமும் பெறுபவர்கள், மாதாந்திர வருமானம் பெறுபவர்கள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையில் RD திட்டங்கள் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் போது சேமிப்பதே தெரியாமல் சேமிக்க முடியும். அதுவும் சிறு தொகையை தினசரி அடிப்படையில் சேமித்து வைத்து அதை ஒவ்வொரு மாதமும் வரவு வைத்து வந்தால் பிற்காலத்தில் ஏதோ ஒரு செலவுக்கு அந்த தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். RD டெபாசிட் திட்டங்கள் சிறு முதலீடாளர்களுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சேமித்து அதனை மொத்தமாக மாதா மாதம் ஆர்டியில் முதலீடு செய்தால் அதற்கு 6 புள்ளி 7 சதவீதம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால் 17 ஆயிரத்து 50 ரூபாய் வட்டியுடன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 50 ரூபாய் வருமானத்தை ஈட்டலாம்.
பாதுகாப்பான முதலீடு
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதத்திற்கு 100 ரூபாய் முதல் செலுத்தி வரலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. சிறு தொகையை சேமிக்க வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு இது போன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டம் சேமிப்பு பழக்கத்தை பெறவும், உங்கள் நிதி இலக்குகளை அடையவும் கண்டிப்பாக உதவிகரமானதாக இருக்கும். அதோடு பாதுகாப்பான, அதேசமயம் உத்தரவாதமான வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
குழந்தைகள் பெயரில் இந்த திட்டத்தை தொடங்கி ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை செலுத்தி வந்தால் அது எதிர்காலத்தில் அவரசத்திற்கு கைகொடுக்கும். குறைந்த தொகையை உண்டியலில் சேமிப்பது போல செலுத்தி வந்தால் அது நமக்கு எதிர்பாராத நேரத்தில் பெரும் தொகையை நமக்கு கொடுக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.