
இளமையில் ஆடிப்பாடி வேலை சேய்து லட்சக்கணக்கில் சம்பாதித்தவர்கள் பலரும் நிதி மேலாண்மை குறித்த புரிதல் இல்லாததால் ஓய்வு காலத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. பணி ஓய்வுக்காலத்தை ஒருவரின் இரண்டாவது வாழ்க்கை எனக் குறிப்பிட காரணம், இந்தக் கால கட்டத்தில்தான் பலராலும் அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய முடிகிறது. அப்போது கையில் பணம் இல்லை என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
பணியில் இருக்கு்ம 15 சதவீதம் முதல் 20 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் ஓய்வுக்கால வாழ்க்கைக்கு போதுமான அளவு சேமிப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 50 வயதை நெருங்குபவர்கள் ஒருவர் பணி ஓய்வுபெறு வதற்குமுன் முக்கியமான ஏழு விஷயங்களைச் செய்தால் ஓய்வுக்கால வாழ்க்கை மிகவும் வசதியாக அமையும் என்கின்றனர் முதலீட்டு ஆலோசகர்கள்.
கடன் வேண்டாம் - சிரமம் கொடுக்கும்
வீட்டுக் கடன் தொடங்கி கார் கடன், தனிநபர் கடன் என எந்தக் கடனாக இருந்தாலும், பணி ஓய்வுக்கு முன் அவற்றை அடைத்துவிட்டால் சிரமம் இருக்காது. வேலை பார்க்கும் காலத்தில் எந்தக் கடன் வாங்குவதாக இருந்தாலும், அதை ஓய்வுக்காலத்துக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அடைக்கும்படியாகக் கடனைத் திரும்பக் கட்டும் காலத்தைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஒருவர் 100% நிதிச் சுதந்திரமாக இருக்கும் போதுதான் ஓய்வுக்காலத்தை ரசித்து அனுபவிக்க முடியும். ஓய்வுக் காலத்திலும் கடனைத் திருப்பி கட்டிக் கொண்டிருந்தால் இந்தச் சந்தோஷம் சாத்தியமில்லை.
ஆபத்து காலத்தில் கை கொடுக்கும் அவசரகால நிதி
ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் அவசரச் செலவு வரலாம். அதுவும் வயோதிக காலத்தில் அதிகமாகவே இருக்கும். விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கை முறை செலவுகளுக்கேற்ப அவசரக் கால நிதியை அதிகமாக வைத்திருப்பது அவசியம். வருமானம் இல்லாத வயதான காலத்தில் அவசரகால நிதி இருப்பது ஒருவருக்குக் கூடுதல் பாதுகாப்பை மனரீதியாக மற்றும் உடல் ரீதியாக அளிக்கும். உங்களிடம் அவசரக் கால நிதி எதுவும் இல்லாதபட்சத்தில் இதர முதலீடுகளை அதற்குப் பயன்படுத்த வேண்டி யிருக்கும். அப்போது பண ரீதியாக இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அவசரகால நிதியானது, ஏதாவது ஓர் அவசரத் தேவைக்குச் செலவாகிவிட்டது எனில், மீண்டும் அந்தத் தொகையை விரைந்து சேர்த்துவிடுவது நல்லது. பொதுவாக, குடும்பத்தின் மாதச் செலவைப்போல் சுமார் ஆறு மடங்கு தொகை அவசரகால நிதியை வைத்திருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் என்பதால் இதை ஒன்பது மடங்காக வைத்துக் கொள்வது நல்லது.
வழிகாட்டும் ஓய்வுக்கால பட்ஜெட்
உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கையை முன்கூட்டியே கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதற்கேற்ப உங்கள் ஓய்வுக்காலத்துக்கான பட்ஜெட்டை உருவாக்கி, அதற்கு என்ன தொகுப்பு நிதித் தேவை எனக் கணக்கிட வேண்டும். உதாரணமாக அலுவலகத்துக்கு செல்ல மாட்டீர்கள். என்பதால் போக்கு வரத்து மற்றும் ஆடைகளுக்கான செலவுகள் குறையும். சுற்றுலா மற்றும் பயணங்களுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் அதிக செலவு செய்ய வேண்டி யிருக்கும்.
பணவரத்தை உறுதி செய்வது கட்டாயம்
ஓய்வுக்காலத்தில் உங்கள் பண வரவு மற்றும் செலவுகளை உன்னிப்பாகத் திட்டமிட வேண்டியது அவசியம். ஓய்வுக்குப் பிறகு வருமானம் வருமா, வீட்டு வாடகை வருமா, கொடுக்க வேண்டி வருமா, முதலீட்டின் மூலம் ஏதாவது வருமானம் வருமா அல்லது பென்ஷன் வருமா என பலவற்றைப் பட்டியல் இட வேண்டும். மேலும், இப்போதுள்ள செயல் களில் எவற்றையெல்லாம் ஓய்வு பெற்ற பிறகு குறைக்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வரவும் செலவு செய்யும் முறையும்
ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி யிலிருந்து எவ்வளவு எடுத்து செலவு செய்யத் திட்டமிட்டு உள்ளீர்கள் என்பதை பார்க்க வேண்டும். அப்படி எடுக்கும் தொகையானது மாதம் / காலாண்டு / அரை ஆண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை உங்களுக்குப் பணம் தேவையா என்பதை ஆராய வேண்டும். எதுவாக இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள முறையான திரும்பப் பெறும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குமுன், தொகுப்பு நிதியை ரிஸ்க் குறைவான கடன் ஃபண்டு களுக்கு மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.
ரிஸ்க்கே வேண்டாம் என்பவர் கள், தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தை அல்லது வங்கி களின் மாத வருவாய் திட்டங் களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தும் நீங்கள் சேர்க்க வேண்டிய தொகுப்பு தொகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் அதற்கு ஏற்ப முன்கூட்டியே தொகுப்பு நிதியை முடிவு செய்ய வேண்டும்.
குடும்ப ஒன்றுமைக்கு இதை செய்யுங்கள்
பணி ஓய்வுக்காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள், இதுவரைக்கும் உயில் எழுதவில்லை எனில், இப்போதாவது அதை எழுதுங்கள். உங்களின் அசையா மற்றும் அசையும் சொத்துகளை சட்டப்படியான வாரிசுகளுக்கு பிரித்து எழுதி ஒழுங்குப்படுத்துங்கள். இது உங்களின் மறைவுக்குப் பின், குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை, சச்சரவைத் தவிர்க்க உதவும். ஒருமுறை உயில் எழுதிவிட்டால், அதை மாற்றக் கூடாது என்பதில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். தேவைப் பட்டால் சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்த உயிலைப் பதிவு செய்துகொள்ளலாம்.
மருத்துவக் காப்பீடு மிக முக்கியம்
உங்கள் தொழிலை ஆரம்பித்த காலத்தில் அல்லது வேலைக்குச் சேர்ந்த புதிதில், 58 அல்லது 60 வயது வரை பிரீமியம் செலுத்தும் விதமாக ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்திருக்கலாம். ஆனால், இப்போது நீங்கள் 55 வயதிலேயே ஓய்வு பெறத் திட்டமிடலாம். எனவே, நீங்கள் ஏற்கெனவே உள்ள காப்பீடு மற்றும் பிற முதலீடுகளை ஓய்வு பெறும் வயதுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது அவசியமாகும்.
மேற்கொண்ட செயல் முறைகளை கையாண்டால் வயோதிக காலத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்காலம் என்கின்றனர் நிபுணர்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.