
பெட்ரோல், டீசல் உற்பத்தியும், தேவை அதிகரித்தால் அதைச் சமாளிக்கும் அளவு கையிருப்பும் இருக்கிறது. மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களில் சில நகரங்களில் திடீரென பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் வரிசையில் நின்றன.
பெட்ரோல், டீசல் உற்பத்தியில் ஏற்படும் இழப்பால் சில்லரை நிறுவனங்கள் சமாளிக்க முடியாமல் சப்ளையைநிறுத்திவிட்டன. இதனால், மக்கள் கூட்டம் பொதுத்துறை பெட்ரோல் நிலையங்கள் பக்கம் திரும்பியதால் திடீர் தேவை அதிகரித்தது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால்,பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால், விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது.
இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18 வரையிலும்டீசலுக்குலிட்டர் ரூ.25 வரையிலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கும் இந்த இழப்பை தனியார் நிறவனங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனால் தனியார் பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியையும், சப்ளையையும் நிறுத்திவிட்டன. இதனால், அங்கு செல்லும் மக்கள் கூட்டம் அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகள் பக்கம் திரும்பியது
இதையடுத்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் “ நாட்டின் சில மாநிலங்களில் சில பகுதிகளில் திடீரென பெட்ரோல், டீசல் தேவை அதிகரி்த்து, பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகள் பக்கம் மக்கள் கூட்டம் திரும்பியது. சப்ளையில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தால் மக்கள் எண்ணினார்கள்.
பெட்ரோல், டீசல் உற்பத்தி தேவைக்கும் அதிகமாக இருக்கிறது.
இருப்பினும் போக்குவரத்து பிரச்சினைகள் உள்ளூர் மட்டத்தில் இருக்கின்றன. இந்தப்பிரச்சினையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் கையிருப்பை அதிகப்படுத்தவும்,கூடுதலாக லாரிகளை சில்லரை நிறுவனங்களுக்கு அனுப்பவும் தயாராகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நகரங்களில் பெட்ரோல் பங்க்குகளில் கூடுதல் நேரம், குறிப்பாக இரவு நேரங்களில் விற்பனையை நடத்தவும் கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில்” ஒவ்வொருவருக்கும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி செய்யப்படும். எங்களின் சில்லரை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மட்டும் முன்எப்போதும் இல்லாத அளவு பெட்ரோல், டீசல் தேவை திடீரென அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.