palm oil price: பெண்களுக்கு நிம்மதி! சமையல் எண்ணெய் விலை குறையப்போகுது: காரணம் இதுதான்..

By Pothy RajFirst Published May 20, 2022, 10:41 AM IST
Highlights

palm oil price :Indonesia palm oil: இந்தோனேசியா அரசு கடந்த 3 வாரங்களாக விதித்திருந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை வரும்திங்கள்கிழமை முதல் விலக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலை படிப்படியாக குறையத் தொடங்கும்.

இந்தோனேசியா அரசு கடந்த 3 வாரங்களாக விதித்திருந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை வரும்திங்கள்கிழமை முதல் விலக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலை படிப்படியாக குறையத் தொடங்கும்.

விலை அதிகரிப்பு

ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்கெனவே சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வந்தநிலையில் இந்தோனேசியாவின் பாமாயில் ஏற்றுமதித் தடையால் சமையல் எண்ணெய் 30 சதவீதம் அதிகரித்தது. இந்தத் தடை நீக்கத்தால், இனிவரும் நாட்களில் ஓரளவு விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம். இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஹோட்டல்கள், சிறிய உணவகங்கள், சாலை ஓரக் கடைகள் வைத்திருப்போருக்கும் நிம்மதியளிக்கும் செய்தியாகும்.

நாட்டின் பணவீக்கம் கடந்த 4 மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதில் ஏப்ரல் மாதம் பணவீக்கம் 7.79 சதவீதம் உயர்ந்துள்ளது இதில் சில்லரை உணவுப் பணவீக்கத்தை 8.38 சதவீதம் உயர்த்தியதில் சமையல் எண்ணெய் விலை முக்கியப் பங்காற்றுகிறது. 

விலை குறையும்

இந்தோனேசியத் தடை விலக்கத்தால் சமையல் எண்ணெய் விலை குறையும்போது பணவீக்கமும் படிப்படியாகக் குறையும். இந்தியா தன்னுடைய ஆண்டு சமையல் எண்ணெய் நுகர்வில் 55% இறக்குமதி செய்கிறது. இதில் 13 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதியில் 8 மில்லியன் டன் மட்டும் பாமாயில் எண்ணெயாகும். இதர சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் அடங்கும். இந்த சமையல் எண்ணெய் பெரும்பாலும் இந்தோனேசியா, மலேசியா நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்குகிறது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் சப்ளை சீரடைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்படுகிறது. 1.70 கோடி தொழிலாளர்கள் பாமாயில் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களின் நலன் கருதி இந்த தடையை விலக்கியுள்ளோம்.

உள்நாட்டில் சமையல் எண்ணெய் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. ஆனால், சப்ளை அதிகரித்துள்ளது. இருப்பினும் ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியைத் தடை செய்ததால் உலகளவில் சமையல் எண்ணெய் விலையில் ஏற்றம் காணப்பட்டது. 

இந்தியாவில் சமையல் எண்ணெய்விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான அடிப்படை வரியை 2022, செப்டம்பர் 30ம் தேதிவரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தற்போது கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான அடிப்படை வரி 5.50% விதிக்கப்படுகிறது


 

click me!