pakistan economic crisis:பாகிஸ்தான் பொருளாதாரம் அதள பாதளத்தை நோக்கிச் செல்வதால் நாட்டின் நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை நேற்று 17 சதவீதம் உயர்த்தி அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் அதள பாதளத்தை நோக்கிச் செல்வதால் நாட்டின் நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை நேற்று 17 சதவீதம் உயர்த்தி அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
லிட்டருக்கு ரூ.30 உயர்வு
இதன்படி பாகிஸ்தான் மக்கள் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 கூடுதலாகத் தர வேண்டிய நிலையில் உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி நகர்வதால் அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு பொருளாதாரரீதியான துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இலங்கை மக்கள் என்னவிதமான வேதனைகளை சந்தித்து வருகிறார்களோ அதேபோன்ற துன்பங்களை பாகிஸ்தான் மக்களும் விலைவாசி உயர்வில் படிப்படியாக அனுபவித்து வருகிறார்கள். பாகிஸ்தான் பொருளாதார நிலைமையும், மெல்ல இலங்கையைப் போல் நகர்ந்து வருகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2-வது முறை
கடந்த வாரத்திலிருந்து 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு வழங்கி வந்த மானியத்தையும் இன்று முதல் அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் பாகிஸ்தான் இருப்பதால், சர்வதேச நிதியத்திடம் கடனுதவி கோரியுள்ளது. இந்த கடனுதவி பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை பாகிஸ்தான் செய்ய வேண்டியுள்ளது, அதில் முக்கியமானது மானியங்களை ரத்து செய்வதாகும். அதை முதல் கட்டமாகச் செய்துள்ளது.
பாகிஸ்தான் நிதிஅமைச்சர் மிப்தாப் இஸ்மாயில் கூறுகையில் “ நாட்டின் நிதிநிலை மோசமடைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையை 17 சதவீதம் அரசு உயர்த்தியுள்ளது. இது நாளை(வெள்ளிக்கிழமை) முதல்அமலுக்கு வருகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு தவிர அனைவருக்கும் எரிபொருள் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசலில் இன்னும் லிட்டருக்கு 9ரூபாய் மானியமாக அரசு வழங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.
கடுமையான உயர்வு
தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.209.86 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.204.15 ஆகவும் இருக்கிறது. மண்எண்ணெய் விலை லிட்டர் ரூ.181.94, லைட் டீசல் லிட்டர் ரூ.178.91 என்று விற்பனையாகின்றன.
நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்றுவதற்கு இதைத் தவிர இம்ரான் கான் அரசுக்கு வேறு வழியில்லை என்று பாகிஸ்தான்பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். சர்வதேச நிதியத்திடம்கடனுதவிக்காக தினசரி பாகிஸ்தான் அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சர்வதேச நிதியம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது