
பாகிஸ்தான் பொருளாதாரத்தின் நிலைமை செல்லும்போக்கைக் கவனித்தால், அடுத்த இலங்கையாக மாறுவதற்கு முயற்சி எடுத்து வருகிறது எனலாம். ஜூன் 1ம் தேதி முதல் சமையல் எண்ணெய் விலை ரூ.208, நெய் ரூ.213 விலை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் விலை உயர்வை அரசு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி நகர்த்தப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
தெற்காசியாவில் இலங்கையின் பொருளாதார நிலைமை எந்த நாட்டுக்கும் வந்துவிடக்கூடாது என்று அனைவரும் கவலைப்படும் சூழலில் பாகிஸ்தான் நிலைமையும் அதை நோக்கித்தான் செல்கிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருக்கும்நிலையில் இந்த விலை உயர்வு மக்களை மேலும் சிரமத்தில் தள்ளும்.
பாகிஸ்தான் அரசின் ரேஷன் பொருட்கள் விற்பனைக் கழகம்(யுஎஸ்சி) அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சமையல் எண்ணெய் விலை கிலோ ரூ.555 ஆகவும், நெய் விலை ரூ.605 ஆகவும் அதிகரித்துள்ளது. சில்லரை விலையில் ரூ.540 முதல் ரூ.560வரைதான் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு அமலாவது குறித்து ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்களுக்கு சலுகை விலையில் பொருட்கள வழங்கும் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமே விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. ஆனால், சில்லரை விலையில் பொருட்கள்விலை ரேஷனைவிட குறைவாக இருக்கிறது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் நெய் விலை 300 மடங்கு அதிகரித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சமையல் எண்ணெய், நெய் விலை உயர்த்தப்பட்டதற்கு எந்தவிதமான காரணத்தையும் பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தானின் வனஸ்பதி எண்ணெய் உற்பத்தியாளர்க் கூட்டமைப்பு தலைவர் உமர் இஸ்லாம் கான் டான் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ யுஎஸ்சி விலைக்கு ஈடாக விரைவில் சில்லரைவிலையில் விற்கப்படும் சமையல் எண்ணெய், நெய் விலையும் வந்துவிடும். யுஎஸ்சி எங்களுக்கு ஏற்ககுறைய ரூ.300 கோடி நிலுவை வைத்திருப்பதால், இனிமேல் சமையல் எண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கமாட்டோம்”எனத் தெரிவித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் இணையதளம் வெளியிட்ட அறிக்கையில் “ பாகிஸ்தான் கரன்ஸி மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது. சர்வதேச நிதியத்தில் பெற்றகடனுக்கு என்ன செய்யப் போகிறது, என்பது தெரியாதத்தால் கரன்ஸி மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் கரன்ஸி 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் மிகப்பெரிய சரிவாகும்”எனத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிதித்துறை அமைச்சர் மிப்தாப் இஸ்மாயில் கூறுகையில் “ சர்வதேச நிதியத்திடம் பெற்ற கடனுக்கு பாகிஸ்தான் இன்னும் 2100 கோடி டாலர் செலுத்த வேண்டும். மறுபடியும் கடன் கேட்கவேண்டுமென்றால்கூட குறைந்தபட்சம் 600 கோடி டாலர்கள் செலுத்த வேண்டும். ஜூன் மாதம் தொடங்கும் பாகிஸ்தான் நிதியாண்டுக்கு செலவுகளை சமாளிக்க 3600 கோடி முதல் 3700 கோடி டாலர்கள் வரை தேவைப்படும். பாகி்ஸ்தானின் சர்வதேச கடன் பத்திரங்கள் மூன்றில் ஒரு பங்கு மதிப்பை இழந்துவிட்டன. இருப்பினும் சர்வதேச நிதியத்திடம் கடன்தீர்ப்பு குறித்துஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை. இப்போதுள்ள நிலையில் வெளிநாட்டில் கடன் பெறமுடியாது, நாட்டின்பணவீக்கத்தைத்தான் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.