புகையிலை, பான் மசாலா போன்ற தீங்கு செய்யும் பொருட்களுக்கு புதிய கலால் வரி!

Published : Dec 01, 2025, 04:46 PM IST
FM Nirmala Sitharaman

சுருக்கம்

ஜி.எஸ்.டி. வரி மாற்றங்களைத் தொடர்ந்து, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலை குறையாமல் இருக்க, மத்திய அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவின்படி, புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு செஸ் வரிக்கு பதிலாக கலால் வரி விதிக்கப்படும்.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிமுறைகளில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், அவற்றின் மீது கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள்

சென்ற செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய ஜி.எஸ்.டி. நடைமுறையின்படி, நான்கு அடுக்குகளாக இருந்த வரி விகிதங்கள் (Tax Slabs) 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டன. அதேசமயம், சிகரெட், புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி (Cess) தொடர்ந்து விதிக்கப்பட்டது.

இந்த வரி மாற்றங்களுக்குப் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் டிவி போன்ற பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகளைக் குறையாமல் பார்த்துக் கொள்வதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வந்தது.

செஸ் வரிக்கு பதில் கலால் வரி

இதன் விளைவாக, இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, இதற்கான மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்க ஏதுவாக, கலால் வரி விதிக்கும் வகையில் இரண்டு மசோதாக்களை அவர் தாக்கல் செய்துள்ளார்.

தற்போது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. செஸ் வரிக்கு மாற்றாக இந்த புதிய கலால் வரி விதிக்கப்படும். இந்த வரியானது சிகரெட், மெல்லும் புகையிலைப் பொருட்கள் (Chewing Tobacco), மற்றும் ஹூக்காக்கள் (Hookahs) போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இத்தகைய பொருட்களுக்கு 40% ஜி.எஸ்.டி. மற்றும் உற்பத்தி வரி (Excise Duty) ஆகியவை விதிக்கப்படும்.

மத்திய அரசு அதிகாரிகள் ளக்கம்

"புகையிலை மற்றும் பான் மசாலா மூலம் கிடைக்கும் வருமானத்தை, சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் பயன்படுத்தும். இதன் மூலம் நுகர்வோருக்கு விலைகள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதே முக்கிய நோக்கம். இது வெறும் வருவாயை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை கிடையாது." என மத்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலை உயர்வின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் அரசின் முக்கியமான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

நகைப்பிரியர்களின் கவனத்துக்கு.. வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? முழு விவரம் இதோ!
பல PF கணக்குகள் உள்ளதா? பிஎப் பணத்தை ஒரே கணக்கில் சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்க