
Why Is Sensex, Nifty Rising Today? / கடந்த வார இந்திய பங்குச் சந்தையுடன் ஒப்பிடுகையில் இன்று, திங்கட்கிழமை பெஞ்ச்மார்க் குறியீடுகள் வலுவான மீட்சியை கண்டன.
இந்திய பங்குச் சந்தை இன்று காலை 10:15 மணியளவில், S&P BSE Sensex 849.30 புள்ளிகள் உயர்ந்து 80,061.83 ஆக இருந்தது. அதே நேரத்தில் NSE Nifty 50 237.10 புள்ளிகள் உயர்ந்து 24,276.45 ஆக இருந்தது. பெரும்பாலான பங்குகளின் சந்தை குறியீடுகள் இன்று பச்சை நிறத்தில் காணப்பட்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிறப்பான வருவாய் அறிக்கையால் இந்திய பங்குச் சந்தைகள் புதிய வர்த்தக வாரத்தை நேர்மறையாக எதிர் கொண்டது. இன்று சந்தை உயர்வுக்கு காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
வங்கி, மருந்து நிறுவனங்களின் பங்குகள்:
துறை ரீதியாக, வங்கிகள், மருந்து மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கி குவித்தனர். இந்தக் குறுகிய வர்த்தக வாரத்தில், முதலீட்டாளர்கள் கூடுதல் வருவாய் முடிவுகள், மாதாந்திர ஆட்டோ விற்பனை, வெளிநாட்டு நிதி வரவு, இந்தியா-பாகிஸ்தான் புவிசார் அரசியல் பதற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2% உயர்வு:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) கிட்டத்தட்ட 2% உயர்ந்தது. நிஃப்டி ஐடி தவிர, அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. நிஃப்டி பொதுத்துறை வங்கி, நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் & எரிவாயு மற்றும் தனியார் வங்கி குறியீடுகள் 1% க்கும் அதிகமாக உயர்ந்தன. எண்ணெய்-வேதிப்பொருட்கள் வணிகத்தில் லாப வரம்பு அழுத்தங்கள் இருந்தபோதிலும், டிஜிட்டல் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகளில் வலுவான வளர்ச்சியால், ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 2.4% உயர்ந்து 19,407 கோடியாக இருந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா
IDFC ஃபர்ஸ்ட் வங்கி மார்ச் காலாண்டு தனி நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 58% சரிந்து ரூ. 304 கோடியாக இருந்ததால், அதன் பங்குகள் 2%க்கும் மேல் சரிந்தன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 724 கோடியாக இருந்தது. மும்பையைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளர் தனது டிரக்குகள் மற்றும் பேருந்துகள் தொகுப்பை வலுப்படுத்த SML-ல் 59% பங்குகளை ரூ. 555 கோடிக்கு வாங்குவதாகக் கூறியதை அடுத்து, மஹிந்திரா & மஹிந்திரா 1% உயர்ந்தது. அதே நேரத்தில் SML இசுசு 9% சரிந்தது.
அப்பல்லோ டயர்ஸ்
அப்பல்லோ டயர்ஸ் அதன் நெதர்லாந்து பிரிவில் உற்பத்தியை 2026க்குள் நிறுத்த திட்டமிட்டுள்ளதால், அதன் பங்குகள் 2.5% சரிந்தன. அதிக இயக்கச் செலவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ரூ. 3 லட்சம் கோடி சம்பாதித்த முதலீட்டாளர்கள்
அல்ட்ராடெக் சிமென்ட், IRFC, TVS மோட்டார், IDBI வங்கி, அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் காஸ் ஆகியவை இன்றைய தினம் காலாண்டு நிதிநிலையை அறிவிக்கின்றன.
பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் முந்தைய அமர்வில் சுமார் ரூ. 422 லட்சம் கோடியிலிருந்து கிட்டத்தட்ட ரூ. 425 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் ரூ. 3 லட்சம் கோடி சம்பாதித்தனர்.
இந்தியா, பாகிஸ்தான் நிச்சயமற்ற போர் பதற்ற சூழல்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலும், இந்தியாவின் நிதானமும்:
வரவிருக்கும் நாட்களில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இந்தியா இதுவரை நிலைமையை ராஜதந்திர ரீதியாக கையாண்டுள்ளது. அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் பதிலடியை தவிர்த்து வருகிறது. இதை சந்தையும் உணர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வேண்டுகோள்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை உலக சமுதாயம் கிட்டத்தட்ட ஒருமனதாக கண்டித்துள்ளது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளது. நல்ல தீர்வை எட்டுமாறு இருநாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்கா சீனா வர்த்தகப் போர்:
சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும் சீனாவும் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்க நிர்வாகம் சீனாவுடன் சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள பேசி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், ஒரு பெரிய சலுகை இல்லாமல் சீனா மீதான வரிகளைக் குறைப்பது சாத்தியமில்லை என்பதையும் டிரம்ப் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.