5 மாதங்களுக்கு பிறகு புழக்கத்துக்கு வந்தது புதிய 20 ரூபாய் நோட்டு..!

By vinoth kumarFirst Published Oct 10, 2019, 1:04 PM IST
Highlights

எல்லோரா ஓவியம், காந்தி படத்துடன் வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டு 5 மாதங்களுக்கு பிறகு புழக்கத்தில் வந்துள்ளன.

எல்லோரா ஓவியம், காந்தி படத்துடன் வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டு 5 மாதங்களுக்கு பிறகு புழக்கத்தில் வந்துள்ளன. 

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டுவிட்டது. தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது.

ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் நோட்டை கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்டு 5 மாதங்களான நிலையில், இந்த நோட்டு, தற்போதுதான் புழக்கத்துக்கு வந்துள்ளது. திருப்பூரில் உள்ள சில பொதுத்துறை, தனியார் வங்கிகள், 20 ரூபாய் நோட்டுகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. வங்கியாளர்களிடம் கேட்டபோது, 'புதிய, 20 ரூபாய் நோட்டுகள் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. சில வங்கிகள் மட்டுமே, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று, புழக்கத்துக்கு விட்டுள்ளன என தெரிவித்துள்ளனர். 

தீபாவளி நெருங்குவதையொட்டி, அதிகளவில், 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் போன்று, புதிய 20 ரூபாய் நோட்டுகளும், கருவூலங்களில் இருந்து, வங்கி கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

click me!