
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவருமான என். சந்திரசேகரனுக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பத்ம விருதுகள்
கலை, இலக்கியம், தொழில்துறை, அறிவியல், கல்வி, விளையாட்டு, சமூகசேவை உள்ளிட்டபல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுகள் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
பத்மபூஷன் விருது
இதில் தமிழகத்தில் நாமக்கலைச் சேர்ந்தவரும், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரும், டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவருமான என். சந்திரசேகரனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறப்பாகச் செயலாற்றிய டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர், டாடா குழுமத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு தலைவரான என். சந்திரசேகரனுக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொழில்மற்றும் வர்த்தகப் பிரிவில் சீரம் மருந்துநிறுவனத் தலைவர் சைரஸ் பூனாவல்லா, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு வழங்கப்பட்டது.
தமிழர்
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் ஒருசிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என் நடராஜன். அரசுப் பள்ளிக்கு நடந்தே சென்று படித்த நடராஜன், கோவையில் உள்ள சிஐடி கல்லூரியிலும் அதன்பின் திருச்சியில் உள்ள ரீஜனல் பொறியியல் கல்லூரியிலும் முதுநிலைப்பட்டப்படிப்பு முடித்தார்.
கடந்த 1987-ம் ஆண்டு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே சந்திரசேகரன் டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார். ஏறக்குறைய 30ஆண்டுகள் டிசிஎஸ் நிறுவனத்தில் அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.
2009ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓவாக சந்திரசேகரன் பொறுப்பேற்றார். அதன்பி்ன் அவர் பதவி விலகியபோது, தான் பதவி ஏற்றபோது இருந்த வருமானதைவிட 3 மடங்கு உயர்த்திக்காட்டினார்.
டாடா சன்ஸ் குழுமம்
அதன்பின் கடந்த 2016ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார். கடந்த 5ஆண்டுகளில் டாடா சன்ஸ் குழுமம் பல்வேறு பிரிவுகளில் நன்கு வளர்ச்சி பெற்றது, சந்திரசேகரன் நிர்வாகத்திறமைகுறித்து வாரியக்குழு நிர்வாகிகள் அனைவருக்கும் மனநிறைவு இருந்ததால் 2-வது முறையாக தலைவராக அடுத்த 5 ஆண்டுக்கு சந்திரசேகரன் கடந்த பிப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும் என் சந்திரசேகரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.2013ம் ஆண்டில் நாஸ்காம் தலைவராவும் சந்திரசேகரன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.