டெல்லி அருகே முகேஷ் அம்பானி கட்டும் புதிய நகரம்: குவியும் முதலீடுகள்!

By Manikanda Prabu  |  First Published Aug 13, 2023, 12:24 PM IST

டெல்லி அருகே ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி கட்டும் புதிய நகரத்துக்கு முதலீடுகள் குவியத் தொடங்கியுள்ளன


உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தலைநகர் டெல்லி அருகே உலகத்தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்கி வருகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கிளை நிறுவனம் அமைத்து வரும் இந்த நகரத்துக்கு மாடல் எகனாமிக் டவுன்ஷிப் (Model Economic Township - MET) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஹரியானாவின் புதிய பொருளாதார மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது. 2022-23 நிதியாண்டில் மட்டும் 76 புதிய நிறுவனங்களிடமிருந்து ரூ.1,200 கோடி முதலீட்டை இந்த நகரம் ஈர்த்துள்ளது.

வட இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படும் இந்த நகரத்தில், பொருளாதார முதலீடு தவிர, குடியிருப்பு பகுதிகள் கையகப்படுத்தலும் வளர்ச்சியை கண்டுள்ளன. இந்த நகரத்தில் புதிதாக வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை 1200ஆக இருக்கும் நிலையில், மொத்த 2000 வீட்டு மனைகள் இதுவரை விற்பனையாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த ஸ்மார்ட் சிட்டி ஏற்கனவே ஏழு நாடுகளில் இருந்து 450 நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்த நகரம் பசுமையான நகரமாக (greenfield city) உருவாக்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த ஸ்மார்ட் சிட்டி 8,000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. 220 KV மின் துணை நிலையம், நீர் வழங்கல் நெட்வொர்க் மற்றும் சுத்திகரிப்பு நிலையம், தராமான சாலை கட்டமைப்பு என இந்த நகரத்திற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தொடர்பான தகவல்கள் பிரம்மிக்கும் வகையில் உள்ளது.

ஹரியானாவின் ஜஜ்ஜரில் உருவாக்கப்படும் இந்த நகரம் மெகா பொருளாதார மையமாக அருகிலுள்ள குருகிராமுடன் இணைந்து நிற்கும். ஜப்பான் தொழில்துறை நகரமாக அறியப்படும் நிஹான் கோஹ்டன், பானாசோனிக், டென்சோ மற்றும் டி-சுசுகி ஆகிய 4 ஜப்பான் நிறுவனங்கள் இதற்கு அருகில் தான் தங்களது ஆலைகளை அமைத்துள்ளனர்.

பாத்திரம் கழுவும் வேலை பார்த்து, இன்று கோடிகளில் சம்பாதிக்கும் தமிழர்.. யார் இந்த பிரேம் கணபதி?

வேலைக்கு நடந்து செல்லுதல் என்ற அடிப்படையில், வடிவமைக்கப்படும் இந்த நகரம், அங்கு ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிறந்த வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பை வழங்கும் என MET சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.கோயல் கூறியுள்ளார்.

இந்த நகரத்தில் வீடு வாங்குபவர்களுக்கு டெல்லி, குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு வலுவான இணைப்பை வழங்கும். ஏனெனில் இந்த பகுதியை சுற்றி தான் டெல்லி, குருகிராம், நொய்டா ஆகிய என்சிஆர் பகுதிகள் உள்ளது. குண்ட்லி மானேசர் பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையை இணைப்பதுடன், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை எளிதில் அணுகும் வகையிலும் இந்த நகரம் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கிளை நிறுவனம் இங்கு ஏற்கனவே ரூ.8,000 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மேலும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. முகேஷ் அம்பானியின் புதிய நகரம் டெல்லி மும்பை தொழில்துறை வழித்தடத்தில், சரக்கு வழித்தடத்துடன் கூடிய ரயில் இணைப்பையும் கொண்டிருக்கும்.

வீடு வாங்குபவர்களின் கல்வி வசதிக்காக SGT பல்கலைக்கழகம் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நடத்தும் தி சேவாக் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள் இந்த நகரத்தில் அமையவுள்ளன. இந்த நகருக்கு அருகில்தான் எய்ம்ஸ் மருத்துவமனையும் உள்ளது.

click me!