கடந்த மார்ச் வரையான நிலவரப்படி, எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.51,21,887 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ.43,97,205 கோடியாக இருந்த எல்ஐசி சொத்து மதிப்பு சென்ற ஓராண்டில் 16.48% உயர்ந்திருக்கிறது.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய ஆண்டை நாடுகளின் ஜிடிபியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
1956ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) தொடங்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகவும் உள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் வரையான நிலவரப்படி, எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.51,21,887 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ.43,97,205 கோடியாக இருந்த எல்ஐசி சொத்து மதிப்பு சென்ற ஓராண்டில் 16.48% உயர்ந்திருக்கிறது.
எல்ஐசியின் இப்போதைய சொத்து மதிப்பு பாகிஸ்தானின் ஜிடிபியை விட சுமார் 2 மடங்கு அதிகம். பாகிஸ்தான் (ரூ.28 லட்சம் கோடி), நேபாளம் (ரூ.3.68 லட்சம் கோடி), இலங்கை (ரூ.6.23 லட்சம் கோடி) ஆகிய மூன்று அண்டை நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பைவிடவும் எல்ஐசியின் சொத்து மதிப்பு அதிகம்.
கடந்த 2023-24 நிதியாண்டில், எல்ஐசியின் லாபம் ரூ.40,676 கோடியாக அதிகரித்துள்ளது. ஆயுள் காப்பீடு தவணையாக ரூ.4,75,070 கோடி வசூல் செய்துள்ளது. எல்ஐசியில் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்கும் பாலிசிதாரர்களுக்கு ரூ.52,955 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டு சந்தையில் 59% பங்குகள் எல்ஐசியிடமே உள்ளது. எல்.ஐ.சி. மருத்துவக் காப்பீட்டு துறையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் சொத்து மதிப்பு அடிப்படையில் 7வது பெரிய நிறுவனமாக எல்ஐசி உள்ளது. எல்.ஐ.சி.யின் மொத்த பங்கு மதிப்பு ரூ.6.46 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 6 மாதங்களில் எல்ஐசி பங்கு விலை 50% உயர்ந்திருக்கிறது. மத்திய அரசுக்கு எல்ஐசியில் 96.5% பங்குகள் உள்ளது.