
தொழிலாளர் சேம நலநிதியின்(இபிஎப்) பலன்களைப் பெறுவதற்கான மாத ஊதிய உச்ச வரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தற்போது இபிஎப் பலன்களைப் பெறுதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.15 ஆயிரமாக இருக்கிறது, இது 21 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், 21ஆயிரம் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐசி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு சமூகபாதுகாப்பு பலன்கள் கிடைக்கும்.
இபிஎப் கடந்த 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது இருந்து 8 முறை ஊதிய உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டால் அது 9வது முறையாக இருக்கும்.
மாதம் ரூ.15 ஆயிரம்வரை ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக இபிஎப் பலன்களை வழங்க வேண்டும் என்ற சூழலில் பல நிறுவனங்கள் அதிகமான ஊதியம் பெறுவோருக்கும் தாமாக முன் வந்து வழங்குகின்றன.
இபிஎப் விதிப்படி, ஒரு நிறுவனத்தில் 20 மற்றும் அதிற்கு மேல் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றினால், பதிவு செய்திருந்தால், அவர்களுக்கு இபிஎப்ஓ மற்றும் அது சார்ந்த பலன்களை வழங்கிட வேண்டும்.
மாத ஊதிய உச்ச வரம்பை ரூ.21 ஆயிரமாக அரசு உயர்த்தினால், கூடுதலாக 75 லட்சம் ஊழியர்களுக்கு இபிஎப் பலன்கள் கிடைக்கும். தற்போது 6.80 கோடி ஊழியர்கள் பங்களிப்பு செய்து வருகிறார்கள். இபிஎப் திட்டத்தின் கீழ் காப்பீடு, பிஎப் உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கும்.
இபிஎப் பலன்கள் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.15 ஆயிரத்துக்கு மேல் உயர்த்த வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. அரசு சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த அறிக்கையில், மாத ஊதிய வரம்பை உயர்த்தலாம் எனப் பரிந்துரை செய்திருந்தது.
கொரோனா காரணமாக ஏராளமான நிறுவனங்கள் இன்னும் பொருளாதார மந்நிலையிலிருந்து முழுமைாயக மீளவில்லை என்பதால், இந்த திருத்தத்தை சிறிது காலம் தாழ்த்தி அமல்படுத்தலாம் என்று அரசின் ஆலோசனைக் குழு பரிந்துரையில் தெரிவித்திருந்தது. இந்தப் பரிந்துரைகளை இபிஎப்ஓ அமைப்பின் அறங்காவலர்கள் குழு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.