
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி தன்னுடைய அனைத்து மாடல் கார்களின் விலையையும்இந்த மாதத்தில் உயர்த்த இருப்பதாக இன்று அறிவித்துள்ளது.
அதிகரித்துவரும் உள்ளீட்டுச் செலவு சமாளிக்க முடியாத நிலைக்குச் செல்வதால், வேறுவழியின்றி கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுஸூகி நிறுவனம் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ள தகவலின்படி, “ கடந்த ஓர் ஆண்டாகவே கார்களுக்கான உள்ளீட்டுச் செலவு அதிகரித்து எதிர்மறையான பாதிப்புகளை நிறுவனம் எதிர்கொண்டது. உள்ளீட்டுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அனைத்து மாடல் கார்களின் விலையையும் இந்த மாதத்தில் உயர்த்துகிறோம். எங்களின் உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை வேறுவழியின்றி வாடிக்கையாளர்களுக்கு கடத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் விலை உயரப்போகிறது தெளிவாகிவிட்டது. ஆனால் எவ்வளவு விலை உயர்வு, எப்போது விலையை உயர்த்தப் போகிறது என்பது குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை.
கடந்த 2021 ஜனவரி முதல் 2022 மார்ச் வரை மாருதி சுஸூகி நிறுவனம் 8.8% வரை கார்களின் விலையை உயர்த்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஏப்ரல் 1ம் தேதி முதல் டயோட்டா நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 4 சதவீதம் உயர்த்தியிருக்கிறது. டயோட்டா நிறுவனம் சார்பில் விற்பனையில் இருக்கும் பார்ச்சுனர், இனோவா கிரிஸ்டா, கேம்ரி, வெல்ஃபயர், அர்பன் க்ரூஸர், கிளான்ஸா ஆகிய அனைத்து கார்களின் விலையும் உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே பிஎம்டபிள்யு நிறுவனம் தனது கார்களின் விலையை 3.5 சதவீதம் உயர்த்துவிட்டது. அதைத் தொடர்ந்து ஆடி மற்றும் மெர்சடிஸ் நிறுவனங்களும் தங்களின் அனைத்து ரக கார்களின் விலையையும் உயர்த்தியுள்ளன.கார் தயாரிப்பில் உள்ளீட்டுப் பொருட்களின் விலைவாசி ஏற்றத்தால் கார்களின் விலையை உயர்த்துவதாக நிறுவனங்கள் காரணமாகக் கூறுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.