மறக்காதீங்க மக்களே !! டிசம்பர் 31ம் தேதிக்குள் நீங்கள் செய்தே ஆக வேண்டிய 4 விஷயங்கள்..

By Asianet TamilFirst Published Dec 16, 2021, 12:00 PM IST
Highlights

இந்த ஆண்டு முடிவதற்குள் நீங்கள் கட்டாயமாக முடிக்க வேண்டிய நிதி சார்ந்த 4 விஷயங்கள் உள்ளன. இதை நீங்கள் செய்யாமல் போனால் அது உங்களுடைய நிதி மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும். டிசம்பர் 31-க்குள் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய அந்த 4 விஷயங்கள் என்ன?
 

 

இபிஎஃப் கணக்கில் நாமினி (வாரிசு)

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் (இபிஎஃப்) எல்லா கணக்கிலும் நாமினி (வாரிசு) பெயரை சேர்ப்பது கட்டாயமாகும். இதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். ஒரு வேளை இந்த தேதிக்குள் நாமினி பெயரை சேர்க்காமல் போனால், பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக பிஎஃப்பின் பயன்களையும், காப்பீடு பணம், ஓய்வூதியம் போன்றவற்றை இழக்க நேரிடலாம். இதற்காக பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், அலைய வேண்டிய தேவையில்லை. ஆன்லைனிலேயே நாமினி பெயரை சேர்க்கலாம்.

ஐடிஆர் தாக்கல்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம், வருமான வரி இணையதளத்தில் வந்த தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, 2020-21-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக கடந்த செப்டம்பரில் மத்திய அரசு அறிவித்தது. வழக்கமாக ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அப்போது செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்தது. இரு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கான கடைசி நாள் தற்போது நெருங்கிவிட்டது. 

ஓய்வூதியதாரரின் வாழ்நாள் சான்றிதழ்

மத்திய பணியாளர், குறைத்தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்தது. அதற்கு முன்பு நவம்பர் 30 வரை இருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் நவம்பர் மாத  ஓய்வூதியத்தைப் பெற வாழ்நாள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அப்போது அறிவித்திருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மூத்த குடிமக்கள் பல மாநிலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதை கருத்தில்கொண்டு அனைத்து ஓய்வூதியதாரர்களும் வாழ்நாள் சான்றிதழை  நவம்பர் 30க்குள் சமர்பிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த அவகாசத்தைத்தான் டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது. அந்த கால அவகாசம் இன்னும் 15 நாட்களில் முடிய போகிறது.

இபிஎஃப்ஓ ஆதார் எண் இணைப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) வழங்கிய பிரத்யேக UAN (Universal Account Number) கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் ஏற்பட்ட நிறுவனங்களின் நிறுவாக்கம் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் சுமார் 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு பரிவர்த்தனை ரசீது (Electronic Challan cum Return-ECR) மேற்கொள்ள ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைப்பது கட்டாயம் என்று இபிஎஃப் அலுவலகம் கடந்த ஜூன் 1 அன்று புதிய விதிமுறையாக அறிவித்தது. மேலும் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டபோது தொழிலாளியின் ஆதார் தகவல்களையும் பிஎஃப் தகவல்களையும் அணுகுவதில் சவால்கள் ஏற்பட்டன. அதை களையவே ஆதார் எண் பிஎஃப் எண் இணைப்பை கட்டாயமாக்கி அதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த அவகாசம் முடிய போகிறது.     

click me!