link pan with aadhaar: pan-aadhaar கார்டை இணைக்க 2023,மார்ச் 31 வரை அவகாசம்: என்ன சொல்கிறது சிபிடிடி உத்தரவு

By Pothy RajFirst Published Mar 31, 2022, 11:39 AM IST
Highlights

link pan with aadhaar: பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை அவகாசமா என்பது குறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு விளக்கியுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க மார்ச் 31ம் தேதி(இன்று) கடைசிநாளாகும். 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை அவகாசமாக என்பது குறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு விளக்கியுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டன.

கால அவகாசம்

குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

பலமுறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு கடந்த 2021 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு 2022ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. 

அபராதம்

ஒருவேளை ஆதார் கார்டை பான்கார்டுடன் இணைக்காமல் இருந்தால், ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் பான் கார்டு செயல் இழந்துவிடும். அந்த கார்டை வைத்து பங்குச்சந்தை, சேமிப்புத்திட்டங்களில் முதலீடு, சிப் என எதிலும் முதலீடு செய்ய இயலாது. அதன் பின் அடுத்த 3 மாதங்களுக்குள் ரூ.500 அபராதம் செலுத்தியும், அதன்பின் ரூ.1000 செலுத்தியும் பான் கார்டை செயல்பாட்டுக்கு கொண்டுவரலாம். ஆனால்,2023, மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால், 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டு முற்றிலும் ரத்து செய்யப்படும். 

அறிவிப்பு என்ன சொல்கிறது

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று இரவு வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பது:

பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்க வழங்கப்பட்ட அவகாசம் 2022, மார்ச் 31ம் தேதியுடன் முடிகிறது. அந்த காலக்கெடுவுக்குள் இணைக்காதவர்களின் பான் கார்டு ஏப்ரல்1ம் தேதிமுதல் செயலிழக்கும். அதன்பின் அடுத்த 3 மாதங்களுக்குள் அதாவது 2022, ஜூன் 30ம் தேதிக்குள் ரூ.500 அபராதமாச் செலுத்தி பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குப்பின் இணைப்பவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும்

 

இவ்வாறு அபராதத்துடன் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அடுத்த ஓர் ஆண்டுக்கு வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யலாம், ரீபண்ட் கோரலாம், வருமானவரி விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால், 2023, மார்ச்31ம் தேதிவரையிலும் பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கப்படாமல் இருந்தால் அந்த பான்கார்டு செயலிழந்துவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதித்துக்கொள்ளுங்கள்

2022, ஜனவரி 24ம் தேதி வரை 43.34 கோடிபான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. 131 கோடி ஆதார் கார்டுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. ஆதார்,பான்கார்டு இணைப்பதன் மூலம் போலியாக பான் கார்டு எடுப்பதும், வரி ஏய்ப்பு செய்வதும் தடுக்கப்படும்.

ஏகேஎம் குளோபல் டேக்ஸ் பார்ட்னர் அமித் மகேஸ்வரி கூறுகையில் “ வருமான வரி செலுத்துவோர், பான் கார்டு வைத்திருப்போர் வருமானவரி இணையதளத்துக்குச் சென்று பான்கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு இணைக்காவிட்டால் அபராதத்தைத் தவிர்க்க இணைத்துவிடுங்கள்” எனத் தெரிவித்தார்

இணைப்பது எப்படி?

1.    ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
2. அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
3. இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்
6. இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்


பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என எவ்வாறு பரிசோதிப்பது

  • www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
  • அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும்
  • இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்புகுறித்த செய்தி வரும்
click me!