கேரன்ஸ் உற்பத்தி துவக்கம் - முதல் யூனிட்டை வெளியிட்ட கியா இந்தியா

By Kevin KaarkiFirst Published Feb 1, 2022, 11:42 AM IST
Highlights

கியா இந்தியா நிறுவனம் புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடலை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கியா நிறுவனம் தனது கேரன்ஸ் எம்.பி.வி. மாடலுக்கான உற்பத்தியை துவங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட முதல் யூனிட் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூரில் உள்ள கியா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.

எஸ்.யு.வி. ஸ்டைலிங்கில் உருவாகி இருக்கும் கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் இந்த மாதம் அறிமுகமாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கியா கேரன்ஸ் உலகம் முழுக்க சுமார் 80-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. 

"புதிய தலைமுறை வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் நோக்கில் புதிய கேரன்ஸ் மாடல் உருவாக்கப்பட்டு உள்ளது. புதிய பயணத்தின் தொடக்கம் எனக்கு சுவாரஸ்ய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நவீன இந்திய குடும்பங்களுடன் கச்சிதமாக ஒற்றுப்போகும் வாகனத்தை உருவாக்க எங்களது குழு அயராத உழைப்பை முதலீடு செய்துள்ளது," என கியா இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஜின் பார்க் தெரிவித்தார். 

கியா கேரன்ஸ் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டி.சி.டி. கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். 

இந்திய சந்தையில் புதிய கியா கேரன்ஸ் மாடல்- பிரீமியம், பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும்  லக்சரி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில்  கிடைக்கும். இதன் டாப் எண்ட் வேரியண்ட் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 64 நிற ஆம்பியண்ட் லைட்டிங், ஏர் பியூரிஃபையர், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

பாதுகாப்பிற்கு கியா கேரன்ஸ் மாடலில் ஆறு ஏர்பேக், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், TPMS, ரியர் பார்கிங் சென்சார்கள், டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம். இந்தியாவில் கியா கேரன்ஸ் விலை ரூ. 14 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் கியா கேரன்ஸ் மாடல்- ஹூண்டாய் அல்கசார் மாடலுக்கு போட்டியாக அமையும். முன்னதாக கியா இந்தியா  நிறுவனம் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 

click me!