
இந்த ஆண்டில் 10-வது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏடிஎப் பெட்ரோல் விலை 5.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விமான எரிபொருள் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல்தேதி, 16-ம் தேதிகளில் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இன்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரையில்லாத வகையில் ஜெட்எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ.6,188 அதிகரித்து, ரூ.12,039ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் 10-வது முறையாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
ஆனால், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 41நாட்களாக எவ்விதமான மாற்றமின்றி நீடித்து வருகிறது.
கடந்த மார்ச் 16ம் தேதி 18.3 சதவீதம் ஜெட் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு, ரூ.17,135 கிலோ லிட்டருக்கு அதிகரித்தது. அதன்பின் ஏப்ரல் 1ம்தேதி ரூ.2,258 கிலோ லிட்டருக்கு உயர்ந்தது. ஏப்ரல் 16ம் தேதி 0.2 சதவீதம் உயர்ந்து, ரூ.3,649 ஆக அதிகரித்தது.
மும்பையில் ஏடிஎப் எரிபொருள் விலை கிலோலிட்டர் ரூ.1,21,847 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,27,854 ஆகவும், சென்னையில் ரூ.1,27,286ஆகவும் இருக்கிறது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போரால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சப்ளையில் தடை ஏற்பட்டு, சர்வதேச அளவில் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியைத்தான் நம்பியுள்ளது. சர்வதேச அளவில் விலை உயரும்போது அதிகமான விலை கொடுத்து கச்சா எண்ணெயை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
விமானங்களைப் பொறுத்தவரை இயக்கச் செலவு, கட்டணம் ஆகியவற்றில் 40 சதவீதம் எரிபொருள் செலவுக்குத்தான் செல்கிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி இன்றுவரை ஏறக்குறைய ஏடிஎப் எரிபொருள் விலை 55 சதவீதம் அதாவது, கிலோ லிட்டருக்கு ரூ.49,017 அதிகரித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.