
ஜெட் ஏர்வேஸ் விமானம் கடந்த 3 ஆண்டுகளுக்குப்பின் ஹைதராபாத்தில் நேற்று பரிசோதனை முயற்சியாக 90 நிமிடங்கள் பறந்து இயக்கிப் பார்க்கப்பட்டது.
2019ம் ஆண்டு ஏப்ரல்மாதத்தோடு ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடன் பிரச்சினை காரணமாக சேவை நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் பறந்தது. மே 5ம் தேதி ஜெட் ஏர்வேஸின் 29-வது பிறந்தநாள், அன்றைய தினத்திலேயே மீண்டும் புதிய பிறப்பை ஜெட் ஏர்வேஸ் எடுத்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட பழைமையான தனியார் விமானப் போக்குவரத்து ஜெட் ஏர்வேஸ். பல்வேறு நிதிநெருக்கடி காரணமாக கடந்த 2019ம் ஆண்டு செயல்பாட்டை நிறுத்தியது. அதன்பின், ஜலான் கல்ராக் கூட்டமைப்பு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் மறுகட்டமைப்பு திட்டத்தை தாக்கல்செய்து மீண்டும் ஜெட்ஏர்வேஸை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளனர்
2019ம் ஆண்டு நிதிநெருக்கடி காரணாக விமானச் சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனம், 3 ஆண்டுகளுக்குப்பின் விரைவில் விமான சேவையில் இயங்க இருக்கிறது.
ஓப்ராய் ஹோட்டலின் தலைவராக இருந்த சஞ்சீவ் கபூர் ஜெய் ஏர்வேஸ் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் விஸ்தாரா விமானநிறுவனத்தில் வர்த்தகப்பிரிவு அதிகாரியாகவும், ஸ்பைஸ் ஜெட் விமானநிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குநராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் முறைப்படி வர்த்தக சேவைக்கு வரும் முன் டெஸ்டிங் விமானம் பறந்து விமானக் கட்டுப்பாட்டு இயக்குநரிடம் சான்று பெற வேண்டும். இதன்படி, ஹைதராபாத் விமானநிலையத்திலிருந்து நேற்று ஜெட் ஏர்வேஸ் பரிசோதனை விமானம் நேற்று 3 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் வானில் பறந்தது.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது, அதில் “ இன்று மே 5ம் தேதி எங்கள் நிறுவனத்தின் 29வது பிறந்தநாள். இன்று ஜெட் ஏர்வேஸ் மீண்டும் பறந்துள்ளது. காத்திருந்த, பணியாற்றி, இந்தநாளுக்காக பிரார்த்தனை செய்த எங்கள் அனைவருக்கும் உணர்ச்சிகரமானநாள். ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நாள் உணர்ச்சிகரமானது” எனத் தெரிவித்துள்ளது
ஜெட் ஏர்வேஸ் சிஇஓ சஞ்சீவ் கபூர், தனது பக்கத்தில் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ரீஷேர் செய்திருந்தார். அதில் “ ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் வானில் பறக்கச் செய்ய உதவிய, பணியாற்றிய அனைவருக்கும் இன்று உன்னதமான, உணர்ச்சிகரமான நாள். இது டெஸ்டிங் விமானம், இது உறுதியான பயணமல்ல. ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டவிமானம் டெல்லி சென்றடையும். அங்கிருந்து பின்னர் ஹைதராபாத் வரும்” எனத் தெரிவித்தார்.
ஜெட் ஏர்வேஸ் விமானம், தனது டெஸ்டிங்கிற்காக போயிங் 737-800 ரக விமானத்தை பயன்படுத்தியது. 9டபிள்யு101 என்ற எண் கொண்ட விமானம் நேற்று ஹைதராபாத்திலிருந்து டெல்லி புறப்பட்டது.
மீண்டும் வர்த்தக சேவையைத் தொடங்குவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 200க்கும் அதிகமான ஊழியர்களை பணிக்கு எடுத்துள்ளது. எப்போது மீண்டும் வர்த்தக சேவையைத் தொடங்கப்போகிறது என்பது குறித்ததகவல் இல்லை. ஆனால் கோடைகாலத்தில் முதல் பயணத்தை தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.