
இஸ்ரேல் - ஈரான் போர் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியை தரும் என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு பகுதிகளில் உருவாகியுள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நெருக்கடி, உலக எரிபொருள் சந்தையை அதிரடியாக பதறவைக்கக் கூடியது. இந்த நிலையில், இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த இறக்குமதி சார்பு நாடுகளாக இருப்பதால், பொருளாதார பாதிப்புகள் தீர்க்கமானவையாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் (Crude Oil) தொடர்பான நுகர்வு, விலை மற்றும் அரசாங்க நிதி மேலாண்மை இவற்றில் தாக்கம் அதிகம் ஏற்படும்.
இஸ்ரேல் - ஈரான் போரால் ஏன் பதற்றம் ?
ஈரான் உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். OPEC உறுப்பினராக உள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம் மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கி இருக்கும் நிலையில், இதனால் அராபிக் வளைகுடா வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படலாம். Hormuz வளைகுடா என்பது உலக நாடுகளு்ககு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான மிக முக்கியமான வழி என்பதால், இதனை ஈரான் மூடிவிட்டதாக அறிவித்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் LPG விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேரல்கள் கச்சா எண்ணெய் பயன்படுத்துகிறது தெரியுமா?, சுமார் 4.8 மில்லியன் பேரல்கள் தேவைப்படுகிறது.இதில் சுமார் 85% வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.அதாவது 122.4 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி மூலம் பெறுகிறது. அதுவும் இது நாள்தோறும் நடக்கும் நடைமுறை.
1 பேரல் Brent crude விலை :$80 - $85 /பேரல்
$10 உயர்ந்தால்:122.4 மில்லியன் பேரல்கள் × $10 = $1.224 பில்லியன்
ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கும்
LPG தொடர்பான நுகர்வு மற்றும் இறக்குமதி
இந்தியாவில் ஆண்டுதோறும் 30 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) LPG தேவைப்படுகிறது.இதில் சுமார் 55% - 60% வரை இறக்குமதி மூலமே பூர்த்தியாகிறது. அதாவது தினமும் 49 ஆயிரத்து 300 டன் எல்பிஜி தினும் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் விலை டன்னுக்கு 100 டாலர் உயரும் பட்டத்தில் கூடுதலாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலவாகும்.
இந்தியாவில் இதுதான் பாதிப்பு:
இந்தியா 50%க்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து LPG இறக்குமதி செய்கிறது.இதன் பெரும்பங்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதன் பின்விளைவாக LPG விலையில் ஏற்றம் ஏற்படும்.
மத்திய அரசு சில சமயங்களில் LPG விலை அதிகரித்தாலும், பொதுமக்களுக்கான விலையை கட்டுப்படுத்த மானியம் அளிக்கிறது.ஆனால் சர்வதேச விலை தொடர்ந்து உயர்ந்தால், அரசின் நிதிசுமை அதிகரிக்கும் அல்லது சில உள்நாட்டு வாடிக்கையாளர்கள் நேரடியாக அதிக விலை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
சமையல் எரிவாயுவின் விலை உயர்வு, உணவுப்பொருட்களின் தயாரிப்பு மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் செலவையும் உயர்த்தும்.இது உடனடி அல்லாதாலும், அடுத்த 1-2 மாதங்களில் உணவுப் பொருட்கள், ஹோட்டல், கேட்டரிங், உணவகங்கள் ஆகியவற்றில் விலை உயர்வாக முடியும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், வாகன எரிபொருள், வாடகை, போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் எல்லாவற்றிலும் செலவு கூடும்.இந்தச் செலவுகள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த ஆண்டுகளில் நடந்தது எப்படி?
2022-ல் ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பமானதும், இந்தியா LPG விலையை சில மாதங்களுக்கு ஒரு சிலமுறை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய அரசு சில முறை வாடிக்கையாளர்களுக்கு மானிய தொகையை நேரடியாக DBT மூலமாக வழங்கியது.
ஒரு மாதம் போர் நடந்தால் இவ்ளோ பாதிப்பா?
போர் சூழல் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்தால் LPG, எரிபொருட்களுக்காக மட்டும் நாள்தோறும் இந்தியா சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்ய வேண்டும் எனவும் இது ஒரு மாதம் தொடர்ந்தால், 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்படும் இந்திய பிரஜைகள்
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு போன்றவை காரணமாக பொதுமக்களின் தினசரி வாழ்வுக்கே அச்சுறுத்தல் ஏற்படும். மத்திய அரசு LPGக்கு கூடுதலாக மானியம் வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.அது மட்டுமல்ல, நிதிச் செலவுகள் எதிர்பாராத அளவில் உயரும். தற்போது CPI அடிப்படையில் இந்தியா 5.4% அளவில் இருக்கிறது.இது 6%-7% வரை செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும் ரூபாய் மதிப்பு சரிவடைந்து பணவீக்க விகிதத்தை மேலும் அதிகரிக்கும்.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கும் போர் நிலை, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். இந்த தாக்கம் எண்ணெய் விலைகளில், LPG விலைகளில், அரசு செலவுகளில் மற்றும் பொதுமக்களின் வாழ்வின் செலவில் காணப்படும். சர்வதேச சந்தையின் மீதான நம்முடைய சார்பு, நம்மை இன்னும் எரிசக்தி தன்னிறைவுக்குத் தூண்ட வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.