
கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.3 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 2019 செப்டம்பரில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.2 சதவீதம் குறைந்து இருந்தது. அதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் குறைந்துதான் இருக்கும் என நிபுணர்கள் கணித்து இருந்தனர். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது.
அதனால் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும். கடந்த செப்டம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. எதிர்பார்த்த மாதிரியே அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. அதுவும் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் சரிவு கண்டுள்ளது. பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்துறை உற்பத்தி சரிவு கண்டுள்ளது.
2018 செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளதால் அவை இன்னும் கடுமையாக விமர்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.