
தகவல் தொழில்நுட்பம், பொறியியல் பயிலும் இளைஞர்களில் 2022ம் ஆண்டில் 3.60 லட்சம் பேரை வேலைக்கு எடுக்க ஐ.டி. நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அன்எர்த்இன்சைட் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் படித்து முடித்தவுடன் வேலைகிடைக்குமா கிடைக்காதா, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகுவோமா என்ற கவலை தேவையில்லை.
இந்த ஐ.டி. நிறுவனங்கள் பெரும்பாலும், படித்து முடித்த ப்ரஷர்களையே அதிகமாக வேலைக்கு எடுக்க முன்னுரிமை அளிக்கும் என்பதால், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் திறமையுள்ளவர்கள் வேலையில் அமர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
அன்எர்த்இன்சைட் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, “ 2022ம் ஆண்டில் எங்கள் கணிப்பின்படி தகவல்தொழில்நுட்பத்தைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து 3.60 லட்சம் இளைஞர்களை வேலைக்கு புதிதாக எடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் 14 முதல் 18 சதவீதம் ப்ரஷர்களுக்கு அதிகமான வாய்ப்பை வழங்கும்.
செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வேலையிலிருந்து ராஜினாமா செய்யும் செயலைக் கட்டுப்படுத்தவும், நிறுவனவளர்ச்சிக்காகவும் ப்ரஷர்களை அதிகமாக எடுக்க முன்னுரிமை அளிப்பார்கள்.
திறமையான இளைஞர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, நீண்டகால ஊக்கத்தொகை, திறமையின்அடிப்படையில் ஊக்கத்தொகை, திறன்வளர்க்கும் பயிற்சிக்காக வெளிநாடு செல்லுதல், பயிற்சிகள் போன்றவை அடுத்தநிதியாண்டில் அதிகமாக இருக்கும். இவை அனைத்தும் ஒரே காலாண்டில் நடக்காமல் ஒவ்வொரு காலாண்டாக நடக்க வாய்ப்புள்ளது.
ஊழியர்கள் அடுத்தடுத்த நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் தற்போது பெறும்ஊதியத்திலிருந்து சராசரியாக 8 முதல் 12 சதவீதம்வரை ஊதிய உயர்வும், பதவி உயர்வுடன் செல்லும் ஊழியர்களுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை ஊதிய உயர்வும் இருக்கலாம்.
கடந்த காலாண்டில் ஊழியர்கள் ஒருநிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்குச் செல்லுதல், வேலையை திடீரென ராஜினாமாசெய்தல், வேலையைக்கைவிடுதல் போன்றவை 23 % உயர்ந்துள்ளது. இதைத்தடுக்கவே ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஊக்கச்சலுகை அடுத்த நிதியாண்டில் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
மேலும் காலியிடங்களும் அதிகமாக இருப்பதால், இளம் வயதில் வரும் ஊழியர்கள், திறன்மிக்கவர்களுக்கு கூடுதல் தேவை இருக்கும். குறிப்பாக ப்ரஷர்களாக வருவோருக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது
அன்எர்த்சைட் நிறுவனத்தின் நிறுவனர் கவுரவ் வாசு கூறுகையில் “ ஊழியர்கள் வேலையிலிருந்து திடீரென நின்றுவிடுவது, விலகுவது, நிறுவனம் மாறுவது பெரியபிரச்சினையாக நிறுவனங்களுக்கு மாறியுள்ளது. இதைத் தடுக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு அவசியம்என்பதால், அடுத்த நிதியாண்டில் ஊதியத்துக்காக பெரிதாக செலவிட வேண்டிய நிர்பந்தத்தில் நிறுவனங்கள் உள்ளன. க்ளவுட் பிளாட்ஃபார்மில் நல்ல வரவேற்பு இருப்பதால், ஐடி நிறுவனங்கள் ப்ரஷர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளி்க்கும் எனத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.