
இந்தியா - அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8-க்கு முன்பாக அறிவிக்கப்பட வாய்ப்பு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், இருநாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை ஜூலை 8க்குள் முடிக்க முயற்சிக்கின்றன. ஜூலை 8-ம் தேதிக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது 90 நாட்கள் கால அவகாசம் முடிவடைந்து பரஸ்பர வரிகள் நடைமுறைக்கு வரும். இதன்மூலம் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 26 சதவீத பரஸ்பர இறக்குமதி வரியைத் தவிர்க்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பியூஷ் கோயல் பயணத்தால் சாதகம்
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வணிக சிக்கல்களை குறைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு, நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் நோக்கில், கடந்த வாரம் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா பயணம் செய்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
வரி விதிப்பில் மாற்றம்
ஜூலை 8-ம் தேதிக்கு முன்பே இடைக்கால ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி நடந்து வருவதாகவும், இதில் பொருட்கள், வரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைத் துறைகள், குறிப்பாக டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவை அடங்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 26 சதவீத கூடுதல் வரியும், 10 சதவீத அடிப்படை வரியும் இந்தியா மீது விதிக்காத வகையில் செயல்பட அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு
இந்திய அரசு அதிகாரிகள் சென்றிருந்த வர்த்தகப் பயணத்தின் போது, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரியர், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கை சந்தித்தார். சமூக வலைதளமான X-ல் வெளியிட்ட பதிவில், பிலட்டரல் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை விரைவுபடுத்த அமெரிக்க வர்த்தக செயலாளருடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக கோயல் கூறினார்.
இந்தியா கோரிக்கை - இறங்கி வரும் அமெரிக்கா
இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த, ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள், இறால், எண்ணெய் விதைகள், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு இந்தியா வரிச் சலுகைகளை எதிர்பார்க்கிறது. சில தொழில்துறை பொருட்கள், ஆட்டோமொபைல்கள்,(மின்சார வாகனங்கள், மதுபானம், ரசாயாணம், பால் பொருட்கள் மற்றும் ஆப்பிள், தானியங்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்கள் போன்ற விவசாயப் பொருட்களின் மீதான வரியை குறைக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இடைக்கால ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சமநிலைப்படுத்தும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.