
இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 9 சதவீதத்துக்கும் அதிகமாக வளரும். பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக மாறும் என மத்திய நிதிஅமைச்சகம் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிஅமைச்சகம் தனது மாந்திர பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்த ஆண்டோடு கொரோனா தொடர்பான பொருளாதார பாதிப்புகள் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். அதன்பின் உற்பத்தி துறை, கட்டுமானத்துறை, வளர்ச்சிக்குரிய காரணிகளாக இருந்து, உற்பத்தி ரீதியிலான ஊக்கமளிப்பு திட்டங்களால் பொருளாதாரம் வேகமெடுக்கும்.
வேளாண்மையைப் பொறுத்தவரை, தொடர்ந்து பயிரிடும் வேளாண் நிலங்கள் அளவு அதிகரித்து வருகிறது, பல்வேறு தானியங்கள், பயிரிடுதல் வகைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் அரசின் உணவு தானியக் கொள்முதலும் அதிகமாகும், கையிருப்பு அளவும் அதிரிக்கும். உணவு தானிய உற்பத்தி அதிகரி்க்கும்போது, விவசாயிகளிடம் இருந்து அதிகமான அளவு கொள்முதல் செய்ய முடியும், அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவுவிலை கிடைக்கும், வருமானமும் பிஎம் கிசான் திட்டத்தில் கிடைக்கும்.
2022, ஜனவரியில் சர்வதேச நிதியம், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியைக் குறைத்திருந்தது. ஆனால் 2022-23ம் ஆண்டில் இ்ந்தியாவின் வளர்ச்சிக் குறித்த கணிப்பை திருத்தி வளர்ச்சியை உயர்த்தியிருக்கிறது.
2020-21ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6.6 சதவீதத்தில் வீழ்ச்சி அடைந்தது, ஆனால், 2022-23ம் ஆண்டில் உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் வளரும் வேகத்தில் இந்தியாவும் வளரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் வலுவான பாதையில் செல்வதற்கான இலக்குகளை 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறது.
நடப்பு நிதியாண்டைவிட முதலீட்டுச் செலவு 35.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, கதிசக்தியின் 7எஞ்சின்கள் மூலம் உட்கட்டமைப்புக்கான இடைவெளி குறைக்கப்பட்டு, தனியார் முதலீடுகள் நாட்டுக்குள் வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் மனதிலிருந்து கொரோனா குறித்த அச்சம், நிலையற்றத்தன்மை குறைந்து வருகிறது, நுகர்வு அதிகரித்து வருகிறது, தேவை அதிகரித்து வருவதால், தனியார் துறை முதலீடுகளை செய்துவருகின்றன.
2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் நாட்டின் இயல்பான ஜிடிபி 11.1 சதவீதம் என இலக்கு வைக்கப்பட்டது. பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டதைப் போன்று பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் வரை இருக்கும். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிக்கையில்கூட 7.8% பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.